மகாராஷ்டிராவில் 773.. டெல்லியில் 348.. அதிர்ச்சியூட்டும் கொரோனா மரணங்கள்..

மகாராஷ்டிராவில் 773.. டெல்லியில் 348.. அதிர்ச்சியூட்டும் கொரோனா மரணங்கள்..

கொரோனா பாதிப்பு

இதுவரை இல்லாத வகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் மட்டும் மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் கொரோனா இறப்புகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

  • Share this:
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிக தீவிரமான கட்டத்தை எட்டி இருக்கிறது. நாள்தோறும் சாதனை எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் சுகாதார கட்டமைப்பே நொறுங்கிப் போகும் அளவுக்கு கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. நிலைமையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை ஒருபுறம் எடுத்து வரும் நிலையில் மறு பக்கம் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.

இதுவரை இல்லாத வகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் மட்டும் மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் கொரோனா இறப்புகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

மகாராஷ்டிரா:

நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் உச்சகட்ட மோசமான நிலையில் இருந்து வரும் மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 773 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள கொரோனா நிலை அறிக்கையில், நேற்று மட்டும் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 66,836 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 74,045 பேர் நேற்று மட்டும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டிலேயே அதிக அளவாக மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 6,91,851 ஆக உள்ளது.

அம்மாநிலத்தில் கொரோனாவால் பலியாவோரின் சதவீதம் 1.52% ஆகவும் கொரோனாவில் இருந்து குணமடைவோரின் சதவீதம் 81.81% ஆக உள்ளது. பாசிட்டிவிட்டி ரேட் 16.53% ஆக உள்ளது.

அதிகபட்சமாக புனே மாவட்டத்தில் மட்டும் நேற்று 9,863 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதற்கடுத்து நாக்பூரில் 7,970 பேருக்கும், மும்பையில் 7,221 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி:

டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள நிலை அறிக்கையின்படி நேற்று டெல்லியில், 24,331 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 348 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். டெல்லியில் 92,000 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3,32,348 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியானது, மேலும் 2,247 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதையடுத்து இன்று நாட்டின் கொரோனா பாதிப்பு மேலும் உயரக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
Published by:Arun
First published: