மகாராஷ்டிரா-வில் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்எல்ஏ-க்கள் பலர் அசாமில் முகாமிட்டுள்ளதால், ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மாநில அமைச்சரவையை இன்று கூட்டி முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டமேலவையில் காலியாக இருந்த 10 இடங்களுக்கு திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 10 இடங்களுக்கு 11 பேர் போட்டியிட்டனர். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 2 வேட்பாளர்களையும், பாஜக 5 வேட்பாளர்களையும் களம் இறக்கியது.
ஒரு எம்.எல்.சி வெற்றி பெற, 26 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது.ஆனால் போட்டியிட்ட 5 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றதால், கொறடா உத்தரவை மீறி ஆளுங்கட்சி வேட்பாளர்கள், பாஜகவுக்கு ஆதரவு அளித்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், சிவசேனா கட்சியை சேர்ந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அக்கட்சியின் 22 எம்எல்ஏக்கள் சூரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்று தங்கினர். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளுடன் அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சிவசேனா தலைமையிலான ஆளுங்கட்சி, பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Also Read: அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப்போக்கு... தர்மம் மீண்டும் வெல்லும்- ஓ. பன்னீர்செல்வம்
தன்னுடன் 40 சிவசேனா எம்எல்ஏ-க்கள் இருப்பதாக ஷிண்டே தெரிவித்துள்ளார். எனினும், 14 முதல் 15 எம்எல்ஏ-க்களே இருப்பார்கள் என்று சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் கூறியுள்ளார். சிவசேனா-வுக்கு 55 எம்எல்ஏ-க்கள் உள்ள நிலையில், கட்சி தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கையிலிருந்து தப்பிக்க 37 எம்எல்ஏ-க்கள் தேவைப்படுகிறது. 37 எம்எல்ஏ-க்கள் ஆதரவை ஷிண்டே பெற்றுவிட்டால், பாஜக-வுக்கு ஆதரவு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், பாஜக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உள்ளது.
இதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மேற்கொண்டு வருகிறார். மேலும், மாநில அமைச்சரவையை இன்று மதியம் ஒரு மணிக்கு கூட்டி ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில், சிவசேனா எம்எல்ஏ-க்கள் குஜராத்திலிருந்து அசாம் மாநிலத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.