Home /News /national /

சிவசேனா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி.. பெரும்பான்மையை நிரூபிக்க கோரும் பாஜக - மகாராஷ்டிரா அரசியலில் நீடிக்கும் குழப்பம்

சிவசேனா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி.. பெரும்பான்மையை நிரூபிக்க கோரும் பாஜக - மகாராஷ்டிரா அரசியலில் நீடிக்கும் குழப்பம்

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

Maharashtra Political Crisis : சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சருக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரை கேட்டுக் கொண்டதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

    மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில், ஆளுநரை பாஜக மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துப் பேசினார். அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக பட்னாவிஸ் தெரிவித்தார்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள், அசாமில் முகாமிட்டுள்ளனர். சிவசேனாவை சேர்ந்த 39 அதிருப்தி எம்எல்ஏக்கள் உட்பட மொத்தம் 48 எம்எல்ஏக்கள், ஏக்நாத் ஷிண்டே அணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கவுகாத்தியில் இருக்கும் எம்எல்ஏக்கள் உடனடியாக மும்பை திரும்ப வேண்டும் என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார். தாங்கள் அனைவரும் சிவசேனாவின் இதயத்தில் இன்னும் வாழ்ந்து வருவதாகவும், தம்மிடம் நேரில் வந்து ஆலோசிக்க வருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, ஒருபுறம் தங்களது மகனும், செய்தித் தொடர்பாளரும், சிவசேனா எம்எல்ஏ-க்களை விலங்குகள் என்று விமர்சித்து வரும் நிலையில், மற்றொரு புறம் அதே எம்எல்ஏ-க்களை ஒன்றிணைக்க முயற்சி மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதன் அர்த்தம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த சூழலில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அமைச்சர் சகன் புஜ்பால் ஆகியோர் காணொலி மூலம் கலந்துகொண்டனர். தொடர்ந்து இன்றும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்றும், எந்தவொரு நெருக்கடியும் இல்லை என்றும் அமைச்சர் அஸ்லாம் சைக் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, டெல்லி சென்றிருந்த முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.பின்னர் மும்பை திரும்பிய அவர், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.

    Also Read: சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் விரைவில் மும்பை பயணம்- ஏக்நாத் ஷிண்டே

    செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், 39 சிவசேனா எம்எல்ஏ-க்கள் தற்போதைய கூட்டணி அரசுடன் இருக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளதால், அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக தெரிவித்தார். எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சருக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரை கேட்டுக் கொண்டதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த சூழலில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நாளை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை ஆளுநர் மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது.இதற்கிடையே மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி சுப்ரியா சுலே, ஏக்நாத் ஷிண்டேவுக்கு பெரும்பான்மை அளவுக்கான எம்எல்ஏக்கள் இல்லை என்றும், 50 எம்எல்ஏக்கள் மட்டுமே அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது தேசியவாத காங்கிரசை எதிர்த்து பேசுபவர்கள், ஒருகாலத்தில் அந்த கட்சியில் இருந்தவர்கள் தான் என்றும் கூறினார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: BJP, Congress, Maharashtra, Uddhav Thackeray

    அடுத்த செய்தி