ஒரே மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் 7வது அமைச்சர்: என்ன நடக்கிறது மகாராஷ்டிராவில்?

அமைச்சர் சாகன் புஜ்பால்

இரு தினங்களுக்கு முன்னர் தான் கல்வி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பச்சு கடுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது

  • Share this:
மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுளதால் ஒரே மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் சிவில் வழங்கல் துறை அமைச்சரும், தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சாகன் புஜ்பாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்று காலை ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்னுடைய கொரோனா பரிசோதனை அறிக்கை பாசிட்டிவ் என வந்துள்ளது. என்னுடன் கடந்த 2 - 3 நாட்கள் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய உடல்நிலை நன்றாக உள்ளது. கவலை கொள்ளத்தேவையில்லை. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொடர்பாக முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் 7வது அமைச்சராகியுள்ளார் சாகன் புஜ்பால்.

இரு தினங்களுக்கு முன்னர் தான் கல்வி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பச்சு கடுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. முன்னதாக அமைச்சர்கள் அனில் தேஷ்முக், சதேஜ் பட்டேல், ராஜேந்திர சிங்னே, ஜெயந்த் பாட்டீல், ராஜேஷ் தோப் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே போல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் கட்சேவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,10,05,850 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே மகாராஷ்டிராவில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்ததையடுத்து இன்று முதல் அனைத்து மத, சமுதாய, அரசியல் கூட்டங்களுக்கு மகாராஷ்டிர அரசு தடை விதித்துள்ளது. மேலும் அடுத்த வாரம் முதல் அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்ற போதிலும், இறப்பு எண்ணிக்கை இன்னும் சீராக உள்ளது. இந்த வாரம், இந்தியாவில் 660 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய வார இறப்பு எண்ணிக்கையை விட 10 அதிகம்.
Published by:Arun
First published: