கேரளாவில் இருந்து மகாராஷ்டிரா வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

கேரளாவில் இருந்து மகாராஷ்டிரா வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

கொரோனா

முன்னதாக டெல்லி - தலைநகர் பகுதி, குஜராத், கோவா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கேரளாவையும் இந்த லிஸ்டில் இணைத்திருக்கிறது மகாராஷ்டிரா.

  • Share this:
கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்து வரும் கேரளாவில் இருந்து மகாராஷ்டிரா வருபவர்கள் கொரோனா பரிசோதனை அறிக்கை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்த போது உயிரிழப்பு, பாதிப்பு என இரண்டிலும் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழ்ந்தது மகாராஷ்டிரா தான். அதே சமயம் கொரோனாவால் பாதிக்கப்படாத மாநிலமாக இந்தியாவை கடந்தும் பாராட்டப்பட்டது கேரள மாநிலம். தற்போது முற்றிலும் மாறான சூழலே இவ்விரு மாநிலங்களிலும் நிலவுகிறது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் தற்போது நோய்த்தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, அதே சமயம் கேரளாவில் தான் தற்போது நாட்டிலேயே அதிக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அங்கு நாள்தோறும் சுமார் 4,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைகின்றனர்.

இந்த நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசு கேரளாவில் இருந்து மகாராஷ்டிரா வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி உள்ளது. முன்னதாக டெல்லி - தலைநகர் பகுதி, குஜராத், கோவா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கேரளாவையும் இந்த லிஸ்டில் இணைத்திருக்கிறது மகாராஷ்டிரா.

இந்த உத்தரவானது சாலை, ரயில் மற்றும் உள்ளூர் விமான சேவையை பயன்படுத்தி வருவோருக்கு பொருந்தும் என விளக்கம் தரப்பட்டுள்ளது. மேலும் விமானம் மூலம் மகாராஷ்டிராவுக்கு வருபவர்கள் 72 மணி நேரங்களுக்குள்ளாக RT-PCR சோதனைக்காக மாதிரியை தந்திருக்க வேண்டும், இதுவே ரயில் மார்க்கமாக வருபவர்கள் 96 மணி நேரங்களுக்குள்ளாக RT-PCR சோதனைக்காக மாதிரியை தந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு பின்னர் ஒரே மாவட்டத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் படித்து வந்தவர்களில் சுமார் 200 மாணவர்களுக்கும் 72 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: