மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் தேஷ்முக்!

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் தேஷ்முக்!

அனில் தேஷ்முக்

அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மும்பை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

  • Share this:
தனக்கு எதிராக சுமத்தப்பட்ட ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்துமாறு மும்பை உயர் நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா செய்தார்.

உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் தன்னிடம் மாதந்தோறும் 100 கோடி ரூபாய் மாமுல் தர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாக மும்பை காவல்துறை ஆணையராக இருந்த பரம் பிர் சிங் வைத்த பகீர் குற்றச்சாட்டு மகாராஷ்டிர கூட்டணி அரசுக்குள் அண்மையில் புயலை கிளப்பியது. இந்த விவகாரம் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனாவிற்கும், தேசியவாத காங்கிரஸுக்கும் இடையே புகைச்சலை கிளப்பியது.

மும்பை காவல்துறை ஆணையராக இருந்த பரம் பிர் சிங்கை ஊர்காவல் படைக்கு மாற்றம் செய்தது மகாராஷ்டிர அரசு. இதனையடுத்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, பரம் பிர் சிங் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது அடுக்கடுக்கான பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

முதல்வருக்கு, பரம் பிர் சிங் எழுதிய கடிதத்தில், “அனில் தேஷ்முக் மாதந்தோறும் 100 கோடி ரூபாய் மாமுல் வசூலித்து தர வேண்டும் என எனக்கும் காவல்துறையினருக்கும் உத்தரவிட்டதாகவும், குறிப்பாக நட்சத்திர விடுதிகளில் இருந்து 50 முதல் 60 கோடி ரூபாயை வசூலித்து தர வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்தார். மேலும் காவல்துறையினரின் பணி மாறுதல்களுக்கு லஞ்சம் தர வேண்டும் எனவும், முக்கியமாக வழக்கு விவகாரம் ஒன்றில் என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள் எனவும் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் இது கூட்டணி அரசில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அனில் தேஷ்முக்கை உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து பாஜக முறையிட்டது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் பரம் பிர் சிங் முறையிட்டார். இந்த வழக்கை உடனடியாகவும், நேர்மையாகவும் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் வலியுறுத்தினார். பரம் பிர் சிங் தவிர்த்து மேலும் மூவர் அனில் தேஷ்முக் மீது பொது நல வழக்கு தொடுத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குகளை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் , அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டுகளை 5 நாட்களில் சிபிஐ விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என இன்று உத்தரவிட்டது.

மும்பை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சில மணி நேரங்களில் அனில் தேஷ்முக் உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
Published by:Arun
First published: