சிவசேனாவின் கோரிக்கையை மறுத்த ஆளுநர்... தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு...!

சிவசேனாவின் கோரிக்கையை மறுத்த ஆளுநர்... தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு...!
News18
  • News18
  • Last Updated: November 12, 2019, 8:45 AM IST
  • Share this:
மகாராஷ்டிராவில் பெரும்பான்மை ஆதரவு கடிதம் அளிப்பதற்கு சிவசேனா கோரிய இரண்டு நாள் அவகாசத்தை ஏற்க மறுத்த ஆளுநர், இன்றிரவுக்குள் ஆட்சியமைக்க வருமாறு மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனான கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், 105 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும், சிவசேனாவின் பிடிவாத நிலைப்பாடு காரணமாக, பாஜகவால் ஆட்சியமைக்க இயலாமல் போனது. இதனால், கால் நூற்றாண்டு காலம் நீடித்த, பாஜக-சிவசேனா கூட்டணியும் முடிவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து, மகாராஷ்டிராவின் இரண்டாவது தனிப்பெரும் கட்சியான சிவசேனா ஆட்சியமைக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனும், எம்எல்ஏ-வுமான ஆதித்ய தாக்கரே, சிவசேனா சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஏக்நாத் பாண்டே உள்ளிட்டோர் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நேற்றிரவு சந்தித்துப் பேசினர்.


இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆதித்ய தாக்கரே, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் ஆட்சியமைக்க தயாராக இருப்பதாகவும், இதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக கூறினார். அதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துவிட்டு வெறும் 24 மணி நேரம் மட்டுமே கால அவகாசம் வழங்கியிருப்பதாக, ஆதித்யா தாக்ரே கூறினார்.

இன்றிரவுக்குள் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதங்களை பெற்று ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதாகவும், ஆதித்யா தாக்கரே குறிப்பிட்டார்.

இதற்கிடையே, மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சிவசேனா நிர்வாகிகள், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து, ஆட்சியமைக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் தங்களது ஆதரவு கடிதங்களை அளிக்கவில்லை என்றும், அந்த கடிதங்களை சமர்ப்பிக்க 3 நாள் கால அவகாசம் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது, மேலும், கூடுதல் கால அவகாசம் வழங்க இயலாது என்பதை ஆளுநர் வெளிப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. இதனால், மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக, மூன்றாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில், தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து ஆளுநரை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் மூத்தத் தலைவர் அஜித் பவார், இன்று இரவு 8.30 மணிக்குள் ஆதரவு கடிதங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்திருப்பதாகவும், கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய உள்ளதாகவும் கூறினார்.

இதற்கிடையே, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். அதே போன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இரண்டு கூட்டங்களில் குறைந்தபட்ச செயல்திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. அதே நேரத்தில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவை பெற்று ஆட்சியமைக்க சிவசேனாவும் முனைப்பு காட்டி வருகிறது. இந்த சூழலில், மகாராஷ்டிராவில் மூன்று வாரங்களாக நீடித்து வரும் அரசியல் குழப்பங்களுக்கு இன்றைக்குள் தீர்வு காணப்பட்டு, அரியணையில் அமரப்போவது யார் என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: November 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading