இந்தியா முழுவதும் காவல்துறை அமைப்பு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, ஒவ்வொரு மாநிலங்களும் காவல்துறைக்கு பணிநேரம், ஊதியம் போன்றவற்றை தாங்களே தீர்மானித்துக்கொள்கின்றன. பொதுவாகவே காவல்துறையில் பணிச் சுமை அதிகமாக உள்ளது என்று நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன. அவர்களுக்கு உரியமுறையில் விடுமுறை அளிக்கப்படுவதில்லை. பணிநேரம் அதிகமாக வேலைவாங்கப்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன.
பணிச்சுமையின் காரணமாக போலீஸார் பொதுமக்களிடம் கடுமையாக நடந்துகொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருந்துவருகிறது. எனவே, காவல்துறை அமைப்பில் தொடர்ச்சியாக சில விதிமுறைகளில் திருத்தங்கள் கொண்டுவரப்படுகிறது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு காவல்துறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஆளுநர், முதலமைச்சர், உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் செல்லும் இடங்களில் சாலையில் பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை தவிர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதேபோல, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சட்டசபையில் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டார்.
Also read: இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா - இன்று ஒரே நாளில் 2.35 லட்சம் பேர் பாதிப்பு
இந்தநிலையில், மகாராஷ்டிராவில் பெண்களுக்கான வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில காவல்துறைத் தலைவர் சஞ்சய் பாண்டே வெளியிட்ட உத்தரவில், ‘ஆண் மற்றும் பெண் காவலர்களின் பணி நேரம் 12 மணி நேரமாக இருக்கும் நிலையில், தற்போது பெண் காவலர்களுக்கு சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை வழங்கும் நோக்குடன் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
உத்தரவின்படி, சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக நாக்பூர், அமராவதி நகரங்கள் மற்றும் புனே கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படுகிறது. அவசர காலத்திலும் பண்டிகைக் காலத்திலும் அவர்களுக்கான பணி நேரத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் அல்லது துணை காவல் ஆணையர்களின் அனுமதியுடன் அதிகரிக்கலாம் எனவும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.