மகாராஷ்டிராவில் மோசமடையும் கொரோனா பரவல்: பத்தே நாட்களில் இருமடங்காக உயர்ந்த ‘பாஸிட்டிவிட்டி ரேட்’!

மகாராஷ்டிராவில் மோசமடையும் கொரோனா பரவல்: பத்தே நாட்களில் இருமடங்காக உயர்ந்த ‘பாஸிட்டிவிட்டி ரேட்’!

மகாராஷ்டிராவில் மோசமடையும் கொரோனா

‘பாஸிட்டிவிட்டி ரேட்’ எனப்படும் தொற்று பரவல் விகிதம் மகாராஷ்டிராவில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி வரை 5%க்கும் குறைவாகவே இருந்து வந்தது.

  • Share this:
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதம் இரு மடங்காக அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா 2வது அலை ஏற்பட்டுள்ளதா என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.

கொடிய கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது மெல்ல இந்த பேரிடரில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது மகாராஷ்டிர மாநிலம். கொரோனா தொற்றால் இந்தியாவிலேயே அதிக பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்தது மகாராஷ்டிரா. கடுமையான இன்னலுக்கு பிறகு தற்போது தான் அங்கு இயல்புநிலைக்கு திரும்புவதற்கான சூழல் ஏற்பட்டது.

இதனிடையே தற்போது மீண்டும் அங்கு கொரோனா தனது பிடியை இறுக்கியுள்ளது புள்ளிவிவரங்கள் வாயிலாக வெளிப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மோசமடையும் கொரோனா


தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனை செய்யப்படுவோரிடையே எத்தனை சதவீதத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது என்ற அடிப்படையிலான ‘பாஸிட்டிவிட்டி ரேட்’ எனப்படும் தொற்று பரவல் விகிதம் மகாராஷ்டிராவில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி வரை 5%க்கும் குறைவாகவே இருந்து வந்தது. ‘பாஸிட்டிவிட்டி ரேட்’ ஆனது கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. பிப்ரவரி 4ம் தேதி 4.8% ஆக இருந்தது, பிப்ரவரி 10ம் தேதி 6.9% ஆகவும், பிப் 14ம் தேதி 6% ஆகவும் பிப் 15 , 16 ஆகிய நாட்களில் 9%க்கு அதிகமாகவும் உயர்ந்துள்ளது.

பாஸிட்டிவிட்டி ரேட் அதிகரித்திருப்பதன் மூலம் அங்கு தொற்று பரவல் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக சில மாவட்டங்களில் தொற்று பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. அம்ராவதியில் 56%, பாந்த்ராவில் 26%, அகோலாவில் 22%, புல்தனாவில் 26.5% உயர்ந்துள்ளது. மேலும் பரிசோதனை எண்ணிக்கையும் அங்கு பெருமளவு குறைந்துவிட்டதாகவும் நாள் ஒன்றுக்கு 500 பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுவதாகவும் சில நாட்களில் இந்த எண்ணிக்கை 200 என்ற அளவிலே இருப்பதாகவும் சுகாதாரத்துறை வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனா பரவலின் 2ம் அலை ஏற்படத் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், பொதுமக்கள் யாரும் கொரோனா விதிமுறைகளை சரிவர பின்பற்றுவதில்லை என்பதால் மும்பையில் மீண்டும் பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசிக்கும் என எச்சரித்துள்ளார்.

“முகக் கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்திக் கொண்டே இருப்பது, சமூக இடைவெளியை பராமரிப்பது போன்றவற்றை நாம் பின்பற்றியே ஆக வேண்டும். கொரோனா பரவல் ஏற்பட்டு ஒரு வருடம் ஆனாலும் நாம் இதனை கடைப்பிடித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால் பொதுமக்கள் பலரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. பொது மக்களின் இந்த அஜாக்கிரதை காரணமாக மும்பையில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்துவது குறித்து மாநில அரசு ஆலோசிக்கும்” என மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்தார்.
Published by:Arun
First published: