மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது!

மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது!

மகாராஷ்டிரா

மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் தினசரி எண்ணிக்கை 60,000 ஐ நெருங்கியது.

  • Share this:
நாட்டிலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்பை பதிவு செய்து வருகிறது மகாராஷ்டிரா. அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அம்மாநிலத்தில் புதன் கிழமையன்று (ஏப்ரல் 7) இதுவரை இல்லாத வகையில் ஒரு நாள் உச்சமாக 59,907 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 322 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,73,261 ஆக உயர்ந்தது. அதே போல உயிரிழப்புகளின் எண்ணிக்கை 56,652 ஆக அதிகரித்திருக்கிறது. இறப்பு விகிதம் தற்போது 1.79 சதவிகிதமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் இதற்கு முன்னதாக அதிகபட்ச அளவாக கடந்த ஏப்ரல் 4ம் தேதி 57,074 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதற்கு அடுத்ததாக நேற்று தான் இந்த அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5,01,559 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே தலைநகர் மும்பையில் ஒரே நாளில் 10,442 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 24 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 4,83,042 ஆகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11,856 ஆகவும் உயர்ந்துள்ளது.

மும்பைக்கு அடுத்ததாக புனே டிவிஷனில் 12,772 பேர், நாக்பூர் டிவிஷனில் 8,846 பேர், நாசிக் டிவிஷனில் 8,181, அவுரங்காபாத் டிவிஷனில் 3,398 பேர், லத்தூர் டிவிஷனில் 3,305 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் 14 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும், இதனைக் கொண்டு 3 நாட்களுக்கு மட்டுமே சமாளிக்க முடியும் எனவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஸ் தோப் கூறியுள்ளார்.

ஆனால் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஸ் தோப்-ன் குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், ராஜேஸ் தோப்பின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. கொரோனாவுக்கு எதிரான மத்திய அரசின் ஒட்டுமொத்த முயற்சிகளையும் மகாராஷ்டிர மாநில அரசு வீணடித்துவிட்டதாக காட்டத்துடன் கூறியுள்ளார்.

மக்களிடையே பீதியைப் பரப்புவது முட்டாள்தனத்தை மேலும் கூட்டுவதாகும். தடுப்பூசி பொருட்கள் நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன, மேலும் இது குறித்து மாநில அரசுகளுக்கு தொடர்ந்து தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. தடுப்பூசி பற்றாக்குறை குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை, என்றார்.
Published by:Arun
First published: