மகாராஷ்டிராவில் இரவு நேரம், வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்!

ஊரடங்கு

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பல அதிரடி அறிவிப்புக்களை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வெளியிட்டிருக்கிறார்.

 • Share this:
நாட்டிலேயே மிக அதிக கொரோனா பாதிப்புகளை பதிவு செய்துகொண்டிருக்கும் மாநிலமாக இருப்பது நாட்டின் தினசரி மொத்த கொரோனா பாதிப்புகளில் 60% அளவுக்கு மகாராஷ்டிராவில் தான் பதிவாகிக் கொண்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 48,000, நேற்று கிட்டத்தட்ட 50,000 புதிய கொரோனா பாதிப்புகள் அங்கு பதிவாகி வருகின்றன.

தினந்தோறும் அதிரடியாக அங்கு கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வருவது அம்மாநில அரசை கவலையில் ஆழ்த்தியது. கடந்த சில தினங்களாகவே அங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பல அதிரடி அறிவிப்புக்களை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வெளியிட்டிருக்கிறார்.

அதன்படி மகாராஷ்டிர மாநிலம் முழுதும் கடுமையான பகுதி நேர ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்:

 • நாளை முதல் இரவு 8 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்

 • வார இறுதி நாட்களில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்

 • நாள் முழுவதும் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை

 • மால்கள், பார்கள், ரெஸ்டாரண்ட்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படும்

 • ஹோம் டெலிவரி மற்றும் அத்யாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி

 • தொழில் மற்றும் கட்டுமான நடவடிக்கைகளுக்கு அனுமதி

 • காய்கறி சந்தை/கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க விதிகள் அறிவிக்கப்படும்

 • திரைப்பட சூட்டிங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை

 • தியேட்டர்கள் மூடப்படும்

 • வார இறுதி நாட்களில் அத்யாவசிய பணிகள் தவிர்த்து பிற நடவடிக்கைகள் அனைத்திற்கும் தடை

 • தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்து 50% அளவுடன் இயங்கும்

 • போக்குவரத்திற்கு தடை ஏதும் இல்லை

 • அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களின் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்

 • உகந்த காரணம் இன்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது

 • இரவு நேர ஊரடங்கு நேரத்தில் கடற்கரை, பூங்காக்கள் மூடப்படும்

 • பேப்பர் போடுபவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

 • முடிதிருத்தும் நிலையங்கள், ஸ்பா, பியூட்டி பார்லர்கள் மூடப்படும்

 • பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பை தவிர பிற வகுப்புகளை நடத்த அனுமதி இல்லை


மேற்கண்ட கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மகாராஷ்டிராவை பொறுத்தவரையில் கடந்த 14 நாட்களில் நாட்டின் புதிய கொரோனா பாதிப்பில் 57% மற்றும் உயிரிழப்புகளில் 47% பங்களிப்பை தந்துள்ளது.
Published by:Arun
First published: