• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Maha Shivaratri 2021 | நாடு முழுவதும் சிவாலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட சிவராத்திரி விழா...

Maha Shivaratri 2021 | நாடு முழுவதும் சிவாலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட சிவராத்திரி விழா...

Youtube Video

தமிழகம் முழுவதும் உள்ள சிவ ஆலயங்களில் மகா சிவராத்திரி விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.

  • Share this:
    சிதம்பரம் நடராஜர் கோயிலில் 4 கால பூஜையுடன் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. கருவறையில் உள்ள மூலவருக்கு தேன், இளநீர், பால் உள்ளிட்ட பொருட்களுடன் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கிழக்கு கோபுர வாயிலில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    நடராஜர் கோவிலுக்கு வெளியே நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. கொரோனா காரணமாக கோவிலுக்குள் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காததால் கோயிலுக்கு வெளியே நாட்டியாஞ்சலி அரங்கேற்றப்பட்டது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் அபிநயங்களுடன் நடனமாடினர்.

    இதேபோல் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி நான்கு கால சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு 11:30 மணிக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பக்தர்கள் தேவாரம், சிவபுராணம் பாடியபடி வழிபாடு செய்தனர். இதில், கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் எதிரில் உள்ள வானியர் மண்டபத்தில், சிவசுந்தரி கலைக்கூடத்தினர் பொதுமக்களும் அபிஷேகம் செய்யும் வகையில் மரகத லிங்கம் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.

    தஞ்சை பெருவுடையார் கோயியில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்திந்த கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

    இராமநாதபுரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா, நேற்று மாலை 6 மணிக்கு முதல் காலை 6 மணி வரை நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. இதில் தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். மேலும் கொரோனா காரணமாக ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரத வீதி உலாவும் நடைபெற்றது.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, லிங்கோத்பவ மூர்த்திக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஓராண்டுக்கு பிறகு கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கிரிவலம் சென்றனர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சிவ நாமம் முழங்க வழிபாடு செய்தனர்.

    மேலும் படிக்க..  அதிமுகவை இனி ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது: அமமுக ராஜவர்மன்

    இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவ ஆலயங்களில் மகா சிவராத்திரி விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: