நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக குழு தலைவர் டி.ஆர் பாலு, பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு, மதுரை எய்ம்ஸ் போன்று கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது போல் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்று கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மதுரை எய்ம்ஸ்சில் கட்டுமானப் பணிகள் முடியவில்லை என்றாலும், வகுப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறினார். பொய்யான தகவல்களை தமிழ்நாடு எம்பி.,க்கள் பரப்புவதாகவும், இந்த விவகாரத்தை தேவையில்லாமல் அரசியல் ஆக்குவதாகவும் மாண்டவியா குற்றம்சாட்டினார்.
மேலும், இந்தியாவில் எந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் உட்கட்டமைப்பு இல்லாமல் செயல்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அப்போது அவருக்கு ஆதரவாக, மேலும் சில பாஜக எம்பிக்கள் எழுந்து நின்று கூச்சலிட்டனர் இதனை தொடர்ந்து, அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தங்களை மிரட்டுவதாக திமுக எம்பி தயாநிதி மாறன் குற்றம்சாட்டினார்.
அவையில் கடுமையான அமளி ஏற்பட்டதால், உறுப்பினர்களை அமைதி காக்கும் படி சபாநாயகர் ஓம் பிர்லா, கேட்டுகொண்டார். மேலும் அமைச்சரின் பேச்சு வரம்பு மீறியதா என தான் பரிசீலனைப்பதாகவும் கூறினார். எனினும் அமைச்சரை கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா முறைப்படி பதில் சொல்லாமல் அதிகாரத்தொனியில் பேசியதாக குற்றம்சாட்டினார்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி திமுக - பாஜக அரசியல் மோதலால் தாமதமாகி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாநகர் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து சமீபத்தில் போராட்டத்தை நடத்தின. மத்திய அரசு தன் பங்கீடான ரூ.400 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திமுக போராட்டம் நடத்தியது. ஆனால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாததை தொடர்ந்து, எய்ம்ஸ் விவகாரத்தை திமுக மீண்டும் கையிலெடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aiims Madurai, BJP, DMK, Lok sabha