மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி இளைஞரின் காலை காரில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம் - நால்வர் கைது

துன்புறுத்தப்பட்ட இளைஞர்

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி இளைஞரின் காலை காரில் கட்டி இழுத்துச் சென்று கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.

 • Share this:
  சக மனிதனை விலங்களைப் போல நடத்தும் கொடூரமான மன நிலையில் இன்னும் மனிதர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக இருக்கிறது மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கும் இந்த நிகழ்வு. சரக்கு வாகனத்தில் கொடூரமாக இழுத்துச் செல்லப்படும் இந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த கன்ஹையலால் இப்போது உயிருடன் இல்லை.

  மத்திய பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் இப்படித்தான் கொடூரமாக கொல்லப்பட்டார். கலான் என்ற கிராமத்தை கன்ஹையலால் இருசக்கர வாகனத்தில் கடந்து சென்ற போது குர்ஜார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் மீது மோதி விட்டார். உடனே அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவரை பிடித்து அடிக்க ஆரம்பித்து விட்டனர். அதோடு நிற்காமல் சரக்கு வாகனம் ஒன்றின் பின்னால் கயிற்றைக் கட்டி அதில் கன்ஹையலாலின் கால்களை கட்டி சாலையில் தரதரவென இழுத்துச் சென்றிருக்கின்றனர்.

  அதில் படுகாயமடைந்த கன்ஹையலால் தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியும் அதற்கு பலன் இல்லாமல் போனது. இந்த கொடூரத்தை அவர்களை படம்பிடித்தும் மகிழ்ந்திருக்கின்றனர். சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அவரை விடுவித்த பின்பும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

  இறுதியில் திருடன் ஒருவனை பிடித்து வைத்துள்ளதாக காவலர்களை வரவழைத்து அவர்களிடம் கன்ஹையலாலை ஒப்படைத்துள்ளனர். நீமுச் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து சரக்கு வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் உள்பட 4 பேரை கைது செய்துள்ள காவல்துறை மற்றவர்களை தேடி வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இது தொடர்பான காணொளி சமூகவலைதளங்களில் பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
  Published by:Karthick S
  First published: