மத்தியப் பிரதேசத்தில் 70 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளத்தில் சிக்கிய அமைச்சரை காப்பாற்றிய மீட்புப்படை

அமைச்சர் மீட்பு

மத்தியப் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

 • Share this:
  மத்தியப்பிரதேச மாநிலத்தில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் சிக்கிய அமைச்சரை மீட்புப்படையினர் விமானம் மூலம் மீட்டனர்.

  தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை ஏற்பட்டுள்ளது.

  மத்தியப்பிரதேசத்தில் குவாலியர்- சம்பல் பிராந்தியங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிவபுரி மாவட்டத்தில் உள்ள சித்தாஹரி பகுதியில் வெள்ளப்பெருக்கால் வீட்டின் மேற்கூரையில் தவித்துவந்த 4 பேர், விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

  தாட்டியா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உதவுவதற்காக சென்ற உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா, வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை விமான மூலம் மீட்புப்படையினர் மீட்டனர்.

  இதேபோல, தாட்டியா மாவட்டத்தில் சிந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சியோந்தா பகுதியில் கோயிலின் மேற்கூரையில் தவித்துவந்த 7 பேர், விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். இதன்படி, ஒரே நாளில் 46 பேரை மீட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

  இந்நிலையில், குவாலியர் மற்றும் சம்பல் பிராந்தியத்தில் 2 பேர் உயிரிழந்ததாக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மேம்பாலங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் சேதமடைந்திருப்பதாகவும், கடந்த 70 ஆண்டுகளில் இதுபோன்ற சேதத்தை பார்த்ததில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 7 பேர் காயமடைந்திருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிந்த் மாவட்டத்திலும், சிவ்புரி மாவட்டத்துக்கு உட்பட்ட கரேரா பகுதியிலும் விமானம் மூலம் மீட்புப்பணிகள் தொடங்கியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சேதங்கள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்ததாகவும், அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பிரதமர் உறுதியளித்திருப்பதாகவும் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

  பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானம் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்துவரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள புலிச்சிந்தலா அணையின் மதகு உடைந்தது. இதனால், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அணையின் மதகு மாற்றியமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஜே.நிவாஸ் தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: