மத்திய பிரதேசத்தில் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறது காங்கிரஸ் அரசு

16 அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதால் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறது காங்கிரஸ் அரசு
கோப்பு படம்
  • Share this:
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கு கோருகிறது. 

மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்களான 22 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் முதல்வரான கமல்நாத் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது. அதில் அமைச்சர்கள் 6 பேரின் பதவி விலகலை மட்டும் சபாநாயகர் ஏற்றுக்கொண்ட நிலையில், அவர்கள் மட்டுமே தங்களது எம்எல்ஏ பதவியை இழந்தனர். மற்ற 16 பேரின் ராஜினாமாவும் ஏற்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், மத்திய பிரதேச சட்டமன்றத்தில் கமல்நாத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பாஜக முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


ராஜினாமாக் கடிதம் அளித்த 16 பேரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பினால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தங்களது கட்சி எம்எல்ஏக்கள் இன்று நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தவறாது பங்கேற்க காங்கிரசும், பாஜகவும் கொறடா உத்தரவு பிறப்பித்தன. இந்த சூழலில் 16 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் என்.பி.பிரஜாபதி நேற்று இரவு அறிவித்தார். அதனால், மொத்தம் 230 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் தற்போது 206 உறுப்பினர்களே இருப்பார்கள்.

அதில், பெரும்பான்மையை நிரூபிக்க 104 பேரின் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 92 உறுப்பினர்களே உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் 2 உறுப்பினர்களும், சமாஜ்வாதியின் ஒரு உறுப்பினரும், 4 சுயேச்சை உறுப்பினர்களும் ஆதரித்தாலும் கூட 99 வாக்குகளே காங்கிரசுக்கு கிடைக்கும். ஆனால் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவுக்கு பெரும்பான்மைக்குத் தேவையானதை விட 3 உறுப்பினர்கள் அதிகமாக அதாவது மொத்தம் 107 உறுப்பினர்கள் உள்ளனர்.

அதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி வெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் சட்டமன்றம் கூடும் முன்பாக முதலமைச்சர் கமல்நாத் செய்தியாளர்களை சந்தித்துப் பேச உள்ளார்.Also See:
First published: March 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading