அதிர்ஷ்ட தேவதை கொடுக்கணும்னு முடிவு செய்துவிட்டால் கூரையை பொய்த்துக்கொண்டு கொடுப்பாள் எனக்கூறுவார்கள் அப்படியொரு சம்பவம் தான் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவருக்கு நடந்துள்ளது. அங்கிருந்த சுரங்கம் மூலம் ஜாக்பாட் அடித்துள்ளது.
நாள் முழுவதும் கடினமாக உழைத்தாலும் 3 வேளை உணவுக்கே திண்டாடும் நிலையில் ஏழை விவசாயிகள் உள்ளனர். வாழ்நாள் முழுவதும் பசி, பட்டினி, கஷ்டத்துடன் போராடும் விவசாயிகள் போன்றவர்களுக்கு என்றாவது ஒருநாள் எதிர்பாராத விதமாக அதிர்ஷ்டம் அடிப்பது உண்டு. அப்படி விவசாயத்தில் வருவாய் இல்லாததால் சுரங்க வேலைக்குச் சென்ற ஏழை விவசாயி ஒருவருக்கு அவர் கனவிலும் நினைத்து பார்க்காத ஜாக்பாட் அடித்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா மாவட்டம் வைரச் சுரங்கங்களுக்கு பெயர் போனது. அந்த சுரங்களில் அப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேலையில்லாத சமயங்களில் வைரங்களை தேடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு தேடி எடுக்கும் வைரத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதனை அவர்கள் ஏலத்தில் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையில் அரசுக்கான வரி மற்றும் ராயல்டி போக மீத தொகையை கொடுப்பார்கள். இது அப்பகுதியில் வழக்கமாக நடக்கூடிய சம்பவமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் பன்னா மாவட்டத்தில் உள்ள பட்டி பகுதியில் வசித்து வருபவர் பிரதாப் சிங் யாதவ், இவர் தனக்கான சிறிய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். அதிலிருந்து கிடைக்கும் வருவாய் குடும்பத்தை நடத்த போதாததால், கடந்த 3 மாதத்திற்கு முன்பு அப்பகுதியில் உள்ள வைரச்சுரங்கம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கம் போல் வேலைக்குச் சென்றவருக்கு பளபளப்பான கண்ணாடி போன்ற பொருள் கண்ணில் பட்டுள்ளது. அதனை கையில் எடுத்து பார்த்தவர் தனக்கு கிடைத்தது வைரம் என்பதை அறிந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அந்த வைரக்கல்லை வழக்கமான நடைமுறைகளின் படி பிரதாப், அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து வைரம் தொடர்பான அதிகாரி ரவி பட்டேல் கூறுகையில், பட்டி பகுதியில் உள்ள சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளியான சிறு விவசாயி பிரதாப் சிங் யாதவ், அங்கிருந்து ஒரு வைரக்கல்லை கண்டுபிடித்துள்ளார். இந்த வைரக்கல் 11.88 கேரட் உள்ளது. இது விரைவில் ஏலத்திற்கு விடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Read More : ஆழ்கடலில் வாழும் விஷத்தன்மை வாய்ந்த அரிய உயிரினம் கரையில் ஒதுங்கியது.. பீதியில் மக்கள்
திடீர் ஜாக்பாட்டால் திக்குமுக்காடி போயிருக்கும் பிரதாப் சிங் கூறுகையில், "ஒரு சிறிய விவசாய நிலம் கொண்ட ஏழை விவசாயி. கூலி வேலையும் செய்கிறேன். கடந்த மூன்று மாதங்களாக இந்த சுரங்கத்தில் கடினமாக உழைத்து வந்த எனக்கு இந்த வைரம் கிடைத்துள்ளது. அதனை நான் வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்துள்ளேன். இந்த வைர கல் மூலமாக கிடைக்கும் பணத்தினைக் கொண்டு தொழில் துவங்கவுள்ளேன். மேலும், எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இந்த தொகையை பயன்படுத்துவேன்” என்கிறார்.
தனியார் நிறுவனங்களின் கணிப்பு படி இந்த வைரம் 50 லட்சம் ரூபாய் வரை ஏலம் போகலாம் எனக்கூறப்படுகிறது. இதில் அரசின் வரி மற்றும் ராயல்டி தொகை போக பெரும் தொகை பிரதாப் சிங் யாதவிற்கு கிடைக்க வாய்ப்புள்ளது. பன்னா மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில் இன்னும் 12 லட்சம் கேரட் வைரங்கள் வெட்டி எடுக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madhya pradesh, Trending, Viral