சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரை 10 அடி குழி தோண்டி புதைத்துவிடுவேன் என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவ்ஹான் எச்சரித்துள்ளார். ஹோசாங்காபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், அண்மைக் காலமாக தாம் மோசமான மனநிலையில் இருப்பதாகவும், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மத்திய பிரதேசத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.
மத்திய பிரதேசத்தில் போதைப்பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, கடந்த 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை பல்வேறு சோதனைகளை காவல்துறையினர் மேற்கொண்டனர். இதுகுறித்து பேசிய முதலமைச்சர், போதைப்பொருட்கள் கடத்துபவர்கள் மனிதாபிமானத்துக்கு எதிரானவர்கள் என்று விமர்சித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே அவரது மேடைப்பேச்சு அமைந்திருந்தது.