மதுவிற்கு எதிராக போராட்டம், சிறுவர்களின் கல்விக்கு உதவி - மதிப்புமிக்க டயானா விருது பெற்ற 17 வயது இளைஞன்

டயானா விருது பெறும் சிறுவன்

மத்தியப் பிரதேசத்தில் 17 வயது சிறுவனுக்கு டயானா விருது வழங்கப்பட்டுள்ளது.

 • Share this:
  சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தனது அற்புதமான முயற்சிகள் மற்றும் தீவிர பிரச்சாரத்திற்காக மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 17 வயது இளைஞருக்கு மதிப்புமிக்க டயானா விருது (Diana Award) வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது. மது அருந்தும் பழக்கத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவும், குழந்தைகளின் கல்வியை ஆதரித்ததற்காகவும் டயானா விருதை பெற்றுள்ளான் 17 வயதான சுர்ஜீத் லோதி (Surjeet Lodhi). மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உழைக்கும் இளைஞர்களை கவுரவிக்க டயானா விருது வழங்கப்பட்டு வருகிறது.

  9 முதல் 25 வயதுடையவர்கள் அவர்களின் சமூக நடவடிக்கை அல்லது மனிதாபிமான பணிகளுக்காக பெற கூடிய மிகவும் மதிப்புமிக்க பாராட்டு இந்த டயானா விருது. வேல்ஸின் இளவரசி டயானாவின் பெயரிடப்பட்ட இந்த விருது 1999-இல் கோர்டன் பிரவுன் தலைமையிலான குழுவால் நிறுவப்பட்டது. உலகத்தை மாற்றும் சக்தி இளைஞர்களுக்கு உண்டு என்ற மறைந்த வேல்ஸ் இளவரசி டயானாவின் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் விதமாக, அவர் பெயரில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. டயானா விருதின் முக்கிய நோக்கம், இளைஞர்கள் சமுதாயத்திற்கு செய்யும் பணிகளைப் பாராட்டுவதும் அவர்களை மேலும் ஊக்கப்படுத்துவது ஆகும்.

  மதிப்புமிக்க டயானா விருதை நாடு முழுவதும் இருந்து பல இளைஞர்கள் பெற்றுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் தான் இந்த சுர்ஜீத் லோதி. மதுவிற்கு எதிரான போராட்டம் மற்றும் கல்விக்கான விழிப்புணர்வை பரப்பும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களின் மூலம் சமுதாயத்திற்கும், குழந்தைகளுக்கும் உத்வேகம் தந்துள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள பிடிஷா (Bidisha) மாவட்டத்தைச் சேர்ந்த சுர்ஜீத், தனது கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வியைப் பெற மற்றும் பள்ளியில் தொடர உதவி செய்துள்ளார்.

  இரண்டாவதாக சுர்ஜீத்தின் கிராமத்தில் உள்ள பெரும்பாலான ஆண்கள் தங்கள் வருமானத்தை மதுவிற்காக அதிகம் செலவிட்டனர். மேலும் மது போதையில் மனைவியை அடிப்பது, குழந்தைகளிடம் தகாத முறையில் நடப்பது உள்ளிட்ட பல குற்றங்கள் பெருகின. இதனை பார்த்து வெகுண்டெழுந்த சுர்ஜீத் மதுவிற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினார். இறுதியாக கிராம பஞ்சாயத்து (கிராம சபை) சுற்றுவட்டார கிராமங்களில் இருந்த 5 மதுபான கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டன. மதுவிற்கு எதிரான கடும் போராட்டத்தை சுர்ஜீத் முன்னெடுக்க மற்றொரு முக்கிய காரணம் அவனும், அவரது தாயும் தொடர்ந்து அவரது தந்தையால் வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளானது.

  மதுவின் கொடுமையை நேரடியாக அனுபவித்த காரணத்தால் சுர்ஜீத் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தை இந்த இளம் வயதிலேயே தீவிரமாக முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது. எனவே கிராம சமூகங்கள் இப்போது ஆண்கள் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புடன் இருக்கிறார்கள். தனக்கு டயானா விருது கிடைத்துள்ளது பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுர்ஜீத், " இந்த விருதைப் பெற்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நாட்டின் குழந்தைகள் மீதான எனது பொறுப்புணர்வை இந்த விருது மேலும் அதிகரித்து உள்ளது. குழந்தைகளின் கல்வி குறித்த விவகாரத்தில் இனி நான் இன்னும் விரிவாக பணியாற்ற முடிவு செய்துள்ளேன். துஷ்பிரயோகம் மற்றும் பல குற்றங்களுக்கு மூல காரணமாக இருக்கும் மதுவிற்கு எதிரான போராட்டம், பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வை இன்னும் தீவிரப்படுத்துவேன். எனக்கு ரோல்மாடலாக இருப்பவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஸ்ரீ கைலாஷ் சத்தியார்த்தி. அவரது வழியை பின்பற்றி குழந்தைகளுக்கான நட்பு உலகமாக நமது நாடு அமைய பாடுபடுவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published: