முகப்பு /செய்தி /இந்தியா / ராமரின் சக்தி இந்தியாவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது - அயோத்தி தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி உரை

ராமரின் சக்தி இந்தியாவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது - அயோத்தி தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி உரை

அயோத்தியில் பிரதமர் மோடி வழிபாடு

அயோத்தியில் பிரதமர் மோடி வழிபாடு

அயோத்தி சென்ற பிரதமர் மோடி அங்கு கட்டப்படும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ayodhya, India

அயோத்தியில் நடைபெற்ற தீப உற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சரயு நதிக்கரையில் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார். 15 லட்சத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சரயு நதிக்கரையில் உள்ள பிரமாண்ட படிக்கட்டுகளில் ஆண்டுதோறும் தீபாவளியின்போது, லட்சக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்படுவது வழக்கம். அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அயோத்தி வந்தடைந்த பிரதமர் மோடி, ராமர் ஸ்ரீராம்லாலா விராஜ்மானுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். மேலும், ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அவர், விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து, தீபோற்சவ நிகழ்ச்சியில் முதல்முறையாக பங்கேற்ற பிரதமர் மோடி தீபத்தை ஏற்றி வைத்ததோடு, சரயு நதிக்கரையில் ஆரத்தி எடுத்து வழிபட்டார். மேலும், ராமர் முடிசூட்டு விழாவிலும் பங்கேற்றார். இதனிடையே, பொதுமக்கள் ஏராளமானோர் சேர்ந்து சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீபங்களை ஏற்றினர். இதனால் சரயு நதிக்கரை ஒளிவெள்ளத்தில் மிதந்தது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ராமரின் சக்தி இந்தியாவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது என்றார். அனைவரையும் உடன் அழைத்துச் செல்லும் ராமர், யாரையும் விட்டுவிடுவதில்லை என்றும், அவரது லட்சியங்களைப் பின்பற்றுவது அனைத்து இந்தியர்களின் கடமை எனவும், பிரதமர் மோடி கூறினார்.

இதையடுத்து பக்தி பாடல்களுடன் சரயு நதிக்கரையில் நடைபெற்ற லேசர் ஒளி காட்சி அயோத்தியில் கூடியிருந்த பக்தர்களை பரசவத்திற்குள்ளாக்கியது. ஆர்வமுடன் அந்த காட்சிகளை செல்போன்களில் பக்தர்கள் படம்பிடித்தனர்.

இதையும் படிங்க: பண்டிகைக் கால கூட்ட நெரிசலை தடுக்க அடுக்கடுக்கான திட்டங்கள்.. ரயில்வே போட்ட பக்கா ப்ளான்!

தொடர்ந்து கண்களை கவரும் விதமாக நடைபெற்ற வாண வேடிக்கையை, ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி கண்டு களித்தார். இந்நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்றைய நிகழ்வில் அயோத்தி சரயு நதிக்கரையில் 15 லட்சத்து 76 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. இதற்கான சான்றினை, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு 9 லட்சத்து 41 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டதே முந்தைய சாதனையாக இருந்தது.

First published:

Tags: Ayodhya, Deepavali, Diwali, PM Modi