LOK SABHA ELECTION 2019: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

First Phase of Voting for Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலை தவிர ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடக்கிறது

News18 Tamil
Updated: April 11, 2019, 7:57 AM IST
LOK SABHA ELECTION 2019: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
தேர்தல்
News18 Tamil
Updated: April 11, 2019, 7:57 AM IST
மக்களவை பொதுத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் நடைபெறும் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் 1,300 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மக்களவை தேர்தல் இன்று முதல் அடுத்த மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக அருணாசலபிரதேசம், ஆந்திரபிரதேசம், அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஆந்திரா

ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 319 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 3 கோடியே 93 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அசாம்

அசாமில் 5 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட 41 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  9,574 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பீகார்
Loading...
பீகாரில் 4 தொகுதிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இங்கு, பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் 7 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 122 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, ஹன்ஸ்ராஜ் அகிர், காங்கிரஸ் கட்சி சார்பில் சுரேஷ் நாராயண், நானா பட்டோல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்க மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஒடிசா

ஒடிசாவில் தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 7, 233 மையங்களில் மக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா

தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதையொட்டி, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 34, 603 வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

உத்தரபிரதேசம்

நாட்டில் அதிகபட்சமாக 80 தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரபிரதேச மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கு மட்டுமே இன்று தேர்தல் நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தும், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்தும் தேர்தலை எதிர்கொள்கின்றன. வாக்களிக்க வசதியாக  11, 235 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உத்தரகண்ட்

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலில் 52 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக 11,235 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே நேரிடையாக போட்டி நிலவுகிறது.

மேற்குவங்கம்

மேற்குவங்க மாநிலத்தில் 2 தொகுதிகளுக்கு மட்டுமே இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. அருணாசலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா மாநிலங்களிலும் தலா 2 தொகுதிளுக்கு இன்று தேர்தல் நடத்தபடுகிறது.

சத்தீஸ்கர், திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், நாகலாந்து, மிசோரம் மாநிலங்களிலும் தலா ஒரு மக்களவை தொகுதிக்கு இன்று வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் அசம்பாவிதங்களை தவிர்க்க 80 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆளில்லா விமானங்கள் மூலமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோக யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள ஒரு தொகுதிக்கும், லட்சதீவில் உள்ள ஒரு தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

மக்களவை தேர்தலை தவிர ஆந்திரா, அருணாசலபிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும், நாடு முழுவதும் காலியாக உள்ள 37 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 23ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.



தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





First published: April 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...