LOCKDOWN ANNOUNCED IN MADHYA PRADESHS BHOPAL INDORE JABALPUR ARU
மத்திய பிரதேசத்தின் இந்த 3 நகரங்களில் லாக்டவுன் அறிவிப்பு!
லாக்டவுன்
மத்திய பிரதேசத்தில் இன்று 1,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 2,73,097 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 6600 ஆக உள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருவதன் எதிரொலியாக அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தின் 3 நகரங்களில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையை அனுமதிக்க வேண்டாம் என்று மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த நிலையில் மத்திய பிரதேசத்தில் கொரோனா பரவலை தடுக்க அதிரடியாக லாக்டவுன் அறிவித்துள்ளார் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்.
அதன்படி மத்திய பிரதேச தலைநகர் போபால், இந்தூர் மற்றும் ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில் நாளையும், ஞாயிற்றுக்கிழமையும் இரண்டு நாட்களுக்கு முழுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கண்ட 3 நகரங்களிலும் மறு உத்தரவு வரும் வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் எனவும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் எனவும் மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் இன்று 1,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 2,73,097 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 6600 ஆக உள்ளது.
இந்தூர் (309), போபால் (272) மற்றும் ஜபல்பூர் (97) ஆகிய நகரங்கள் தான் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளன.
இதனிடையே மகாராஷ்டிராவில் இருந்து வரும் மற்றும் செல்லும் பேருந்துகள் நாளை முதல் ரத்து செய்யப்படும் எனவும் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான அறிவித்துள்ளார். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள சந்தைகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும் எனவும், கொரோனா தடுப்பூசிகளை ஒரு நாளுக்கு 5 லட்சம் பேர் என்ற அளவில் அதிகரிக்க வேண்டும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.