கடன் தள்ளுபடி செய்த தகவலை தெரிவிக்காமல் விட்ட கொடுமை: பஞ்சாப் விவசாயிகள் இருவர் தற்கொலையின் பின்னணி அதிர்ச்சி

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள்.

சொசைட்டியின் செயலர் அம்ரித் சிங், தனக்கு இத்தகைய நோட்டீஸ் பற்றித் தெரியாது என்றும் கடந்த செப்டம்பர்-அக்டோபரிலேயே கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்டு விட்டது என்றார்.

  • Share this:
    வெள்ளிக்கிழமை இரவு ஜக்தர் சிங் பாஜ்வா (70), இவரது மகன் கிருபால் சிங் பாஜ்வா (40) ஆகிய விவசாயிகள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.

    ஹோஷியார்பூரின் மொஹாதிர்பூர் கிராமத்தைச் சேர்ந்த தந்தை, மகன் இருவரது தற்கொலைக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு பஞ்சாப் விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் இருவரது கடனும் தள்ளுபடி செய்யப்பட்டது ஆனால் இதன் தகவலை இருவருக்கும் தெரிவிக்காமல் விட்ட கொடுமையினால் இரண்டு உயிர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளன.

    இருவரும் நடைபெற்று வரும் மத்திய அரசுக்கு எதிரான விவசாயப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    இத்தனைக்கும் தற்கொலை செய்து கொண்ட 70 வயது ஜக்தர் சிங் கிராமத் தலைவர். இவரது மகன் தன் தற்கொலை குறிப்பில் பஞ்சாப் மற்றும் மத்திய அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் அரசு தங்கள் கடனைத் தள்ளுபடி செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    ஆனால் இப்போது அம்பலமானது என்னவெனில், கூட்டுறவுச் சங்கம் இவர்கள் வாங்கிய கடனுக்கு இவர்களது வீட்டை ஏலம் விடப்போவதாக அறிவித்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது சங்கத்திலிருந்து வாங்கிய கடனுக்கு வீட்டை ஏலம் விடப்போகிறோம் என்ற நோட்டீஸ்தான் இவர்களின் தற்கொலைக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

    ஆனால் 2017-ம் ஆண்டு பஞ்சாப் அரசு அறிவித்த கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் இவர்கள் தள்ளுபடிக்குத் தகுதியானவர்களே என்பது தற்கொலைகளுக்குப் பிறகு தெரியவந்துள்ளது. கடன் தள்ளுபடிக்கான கோப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது, ஆனால் கூட்டுறவு சங்கம் இதனை பாஜ்வாக்களிடம் தெரிவிக்காததால் அவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    ஜக்தர் சிங் பாஜ்வா 3 ஏக்கர்கள் நிலம் வைத்துள்ள சிறு விவசாயி, இதில் 2 ஏக்கர்களை தன் மகன்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுத்தார். இவரது ஒரு ஏக்கர் நிலத்தையும் தனியார் வங்கி கடனுக்காக விற்று விட்டார்.

    தந்தை மகன் இருவருக்கும் சேர்த்து ரூ.6.50 லட்சம் கடன் இருந்தது.

    இந்நிலையில் சொசைட்டியிலிருந்து வந்த நோட்டீஸில் கிருபால் சிங் ரூ.1,67,365 கடன் தொகை நிலுவையில் இருப்பதாகவும் 2018 ஜூலை 31 லிருந்து கடன் தொகை செலுத்தப்படவிலலி என்றும் இதனையடுத்து வட்டித்தொகை ரூ.38,000 சேர்த்து மொத்தமாக கடன் தொகை ரூ.2,15,418 ஆக அதிகரித்ததாகவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்குள் இந்த தொகையை செலுத்தவில்லை எனில் நடவடிக்கை பாயும் என்று கூட்டுறவு சங்கம் எச்சரித்திருந்தது.

    அதாவது தொகையை செலுத்தவில்லை எனில் கைது செய்யப்படுவார் என்றும் வீடும் சொத்தும் ஏலம் விடப்படும் என்றும் சொசைட்டி எச்சரித்திருந்தது. ஆனால் உண்மையில் கடன் தள்ளுபடிக்கு இவர்கள் தகுதியுடையவகள் பட்டியலில் இருந்துள்ளனர் என்பதுதான் கொடுமை.

    சொசைட்டியின் செயலர் அம்ரித் சிங், தனக்கு இத்தகைய நோட்டீஸ் பற்றித் தெரியாது என்றும் கடந்த செப்டம்பர்-அக்டோபரிலேயே கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்டு விட்டது என்றார்.

    கிரிபால் சிங்கின் தற்கொலைக் குறிப்பில் மத்திய அரசைச் சாடியிருந்தார். பஞ்சாப் அரசும் கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் மனதின் குரலைக் கேட்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். தந்தையும் மகனும் சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் செயல்பூர்வமாக ஈடுபட்டிருந்தனர்.

    இன்று சரியான தகவல் போய்ச் சேராததால் தற்கொலை செய்து கொண்டது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Muthukumar
    First published: