இந்தியாவில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியல்!

இந்தியாவில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியல்!

ஊரடங்கு

மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. செவ்வாய்கிழமை நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 1,61,736 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். வைரஸ் பாதிப்படைந்த 879 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

  ஹரியானா :

  திங்கள்கிழமை முதல் ஹரியானாவில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அம்மாநில உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ``சில நாள்கள் கழித்து நிலைமையை பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். திங்கள்கிழமையன்று ஹரியானாவில் 3,818 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். கடந்த ஐந்து மாதங்களில் இந்த எண்ணிக்கை மிக அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  மத்தியப்பிரதேசம் :

  மத்தியப்பிரதேசத்திலும் திங்கள் கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது ஏப்ரல் 19-ம் தேதி வரை நடை முறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பர்வானி, ராஜ்கர் மற்றும் விடிஷா ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல, பாலகாட், நர்சிங்பூர் மற்றும் சியோனி ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 22-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  மகாராஷ்டிரா :

  கொரோனாவால் மிகவும் பாதிப்படைந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதன்மையாக உள்ளது. திங்களன்று மட்டும் அம்மாநிலத்தில் 51,751 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். பாதிப்படைந்த 258 பேர் உயிரிழந்துள்ளனர். இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மேலும் வார இறுதி நாள்களில் முழுமையான ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான முக்கிய முடிவுகள் ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு எடுக்கப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

  உத்தரப்பிரதேசம் :

  இரவு நேர ஊரடங்கு உத்தரவானது உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் அமலில் இருந்து வருவதாக அம்மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த உத்தரவு வரும்வரை தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அம்மாவட்ட மேஜிஸ்ட்ரேட் நவநீத் சிங் சாஹல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் கோரக்பூர் மாவட்ட நிர்வாகமும் ஏப்ரல் 18 வரை இரவு நேர ஊரடங்கை பிறப்பித்துள்ளது. லக்னோ, கான்பூர், கவுதம புத்த நகர், அலகாபாத், மீரட், காசியாபாத் மற்றும் பாரேலி ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

  கர்நாடகா :

  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சனிக்கிழமை இரவு முதல் ஊரடங்கானது கர்நாடக மாநில தலைநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 11 நாள்கள் இந்த ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் மற்றும் நோயாளிகளுக்கு மட்டுமே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெங்களூர், மைசூர், மங்களூர், கலாபுராகி, பிதார், துமகுரு, உடுப்பி-மணிப்பால் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 20 வரை தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

  டெல்லி :

  டெல்லியில் ஏப்ரல் 30-ம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் புதிதாக 11,491 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவசரத் தேவைகளை தவிர்த்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். முழுமையான ஊரடங்கிற்கு ஆதரவாக மாநிலம் இல்லை என்றும் டெல்லியில் கொரோனா வைரஸ் நிலைமையை அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Ram Sankar
  First published: