மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க மதுபானங்களின் விலையை 20-25% வரை தெலுங்கானா அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது.
தெலுங்கானாவில் அனைத்து வகை மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் ஆண்டு வருவாய் ரூ.6000 முதல் ரூ.7000 கோடி வரை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், ரூ.495 மதிப்பிலான 1,000 மி.லி அளவு கொண்ட ‘புல்’ மதுபாட்டிலின் விலை ரூ.120 அதிகரித்து ரூ.615 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், அனைத்து குவாட்டர் மதுபாட்டிலின் விலையும் ரூ.20 வரை அதிகரித்துள்ளது. மேலும், அனைத்து ‘பீர்’ வகைகளும் ஒரு பாட்டிலுக்கு குறைந்தது ரூ.10 முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை பட்டியலானது இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, நேற்றைய தினம் கலால் அதிகாரிகள் மாநிலத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள், ஒயின்ஷாப்கள், பார்கள் மற்றும் பப்புகளில் நேற்று இரவு விற்பனைக்கு பின்னர் சோதனை மேற்கொண்டனர். அனைத்து இடங்களிலும் கையிருப்பில் உள்ள மதுபானங்கள் புதிய விலையிலே இன்று முதல் விற்பனை செய்யப்படும்.
மேலும் படிக்க: ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை: உச்ச நீதிமன்றம்
தெலுங்கானாவில் கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு முதற்கட்ட ஊரடங்குக்கு பின்னர் மதுபானங்களில் விலை உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, தற்போது தான் மதுபானங்களில் விலை உயர்த்தப்படுகிறது.
தொடர்ந்து தெலுங்கானாவில் அரசு தனது வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அண்மை காலமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நிலத்தின் சந்தை மதிப்பை உயர்த்தி, சொத்து பத்திர பதிவுக்கான கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. அதைத்தொடர்து, போக்குவரத்து, மின்சார கட்டணத்தையும் உயர்த்தி அறிவித்து. அந்த வரிசையில் தற்போது மதுபானங்களின் விலையையும் உயர்த்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.