வீட்டுக்குழாயில் கொட்டிய சாராயம்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...!

வீட்டுக்குழாயில் கொட்டிய சாராயம்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...!
  • News18
  • Last Updated: February 6, 2020, 9:30 AM IST
  • Share this:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் சாலக்குடியில் சாலமன் அவென்யூவில் இருக்கிறது இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு. இங்குள்ள வீடு ஒன்றில் கடந்த திங்கள்கிழமை குழாயைத் திறந்தவர் தண்ணீரில் சாராய வாசனை வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தண்ணீரை சோதித்துப் பார்த்தபோது அதில் மதுபானம் கலந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பக்கத்து வீட்டில் விசாரித்தபோது அவர்களுக்கும் மதுபானம் கலந்த தண்ணீரே குழாயில் வருவதாக தெரிவித்துள்ளனர். மொத்தம் 18 வீடுகளிலும் இப்படி சாராயம் டோர் டெலிவரி போல டேப் டெலிவரியாக வந்ததால் அதிர்ந்து போன உரிமையாளர்கள், தண்ணீர் தொட்டியை சோதித்துப் பார்த்தபோது அங்கே மதுபான தண்ணீரே வாசம் வீசியுள்ளது.

குழம்பிப்போன வீட்டின் உரிமையாளர்கள் விசாரித்தபோதுதான் அதிர வைக்கும் அந்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகே ரச்சனா என்ற மதுபான குடிப்பகம் செயல்பட்டுள்ளது. அதில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்ததாக 6 ஆண்டுகளுக்கு முன்பு 6 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை கலால்வரித்துறையினர் பிடித்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றப் படி ஏறி இறங்க 6 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட நிலையில், மொத்த மதுபானத்தையும் அழித்து விடுங்கள் என தீர்ப்பு வந்திருக்கிறது.


6 ஆயிரம் லிட்டரை எப்படி ஒழித்துக்கட்டுவது என கூடி காதைக் கடித்துக் கொண்ட கலால் வரித்துறையினர், இறுதியாக குழி தோண்டி ஊற்றி விடலாம் என முடிவு செய்துள்ளார்கள். அந்த மதுகுடிப்பகம் இருந்த இடத்திலேயே குழி தோண்டப்பட்டு 6 ஆயிரம் லிட்டர் சாராயத்தையும் ஊற்று ஊற்று என ஊற்றியிருக்கிறார்கள்.

பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த மதுஒழிப்புப் பணி 6 மணி நேரம் நீடித்திருக்கிறது. வேலையை முடித்துவிட்டு கலால்துறையினர் நிம்மதியாக சென்ற பின்னால் அருகில் குடியிருப்பில் இருந்த மக்கள் நிம்மதி இழந்துவிட்டனர். 6 வருடம் பழமையான அந்த மது, நிலத்தடி நீருடன் கைகோர்த்து அதற்கும் போதை ஏற்றியிருக்கிறது. அப்படி மதுபானம் கலந்த தண்ணீர் ஆழ்துளை கிணறு மூலம் ஏற்றப்பட்டு வீட்டின் குளியலறைக்கே வந்திருக்கிறது.

வீடெல்லாம் மதுபானம் கலந்த தண்ணீரே வருவதால் குளிக்கவும் முடியாமல், வேறு பணிகளையும் செய்ய முடியாமல் 18 குடும்பங்களும் தவித்துப் போய் நிற்கின்றனர். அதனால் வேலைக்கும், பள்ளிக்கும் செல்ல முடியாமல் தவிப்பதாக கூறுகிறார்கள் இங்கே குடியிருப்பவர்கள். குடி குடியைக் கெடுக்கும் என கேள்விப்பட்டிருப்போம், ஆனால் இப்படியெல்லாம் குடியைக் கெடுக்கும் என யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள்.
First published: February 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்