உலக பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானி இரு நாள்களில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்துள்ளதாகவும், இதன் எதிரொலியாக அதானி குழும நிறுவனங்களில் அதிகப்படியான பங்குகளை முதலீடு செய்திருந்த எல்.ஐ.சி நிறுவனம் கடந்த 2 நாட்களில் 16,627 கோடி இழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
சாதாராண தொழிலதிபராக தனது வாழ்க்கையை தொடங்கிய கவுதம் அதானி, இன்று உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். ஆசியாவின் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்திலும் உலக பணக்காரர்களின் பட்டியலில் 4வது இடத்திலும் உள்ளார். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க் கடந்த புதன்கிழமை அறிக்கை வெளியிட்டது. அதில் அதானியின் நிறுவனங்களின் பங்குமதிப்பு உயர்வைக் காட்டி மிக அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் பங்குச் சந்தையில் முறைகேடுகள் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறிப்பாக அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அன்றைய தினம் அதானி குழுமத்திற்கு 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது
வியாழக்கிழமை குடியரசு தினம் என்பதால் பங்குச் சந்தைகள் இயங்கவில்லை. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் இடையில் அதானி குழுமத்தின் பங்குகள் 20 சதவிகிதம் வரை சரிவை கண்டன.
அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 19 புள்ளி 65 சதவிகிதமும் அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள்19 சதவிகிதத்திற்கு மேலும் சரிந்தன. அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 15 புள்ளி 50 சதவிகிதம் சரிந்தது. குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் 6 புள்ளி 19 விழுக்காடு இழப்பை சந்தித்தது. இதன் மூலம் இரு வர்த்தக அமர்வுகளில் அதானி குழுமத்திற்கு 4 லட்சம் கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எல்.ஐ.சி இழப்பு:
இந்நிலையில், அதானி குழும நிறுவனங்களில் அதிகப்படியான பங்குகளை முதலீடு செய்திருந்த எல்.ஐ.சி நிறுவனம் கடந்த 2 நாட்களில் 16,627 கோடி இழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, அதானி குழுமத்தில் எல்.ஐ.சி யின் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ. 72,193 கோடியாக இருந்த நிலையில், நேற்றையத் தினம் ரூ. 55,565 கோடியாக சரிந்தது. கிட்டத்தட்ட 22% வீழ்ச்சியைக் கண்டுள்ளது. மேலும், சந்தை வீழ்ச்சி காரணமாக, எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகள் விலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.
அதேபோன்று, அதானி குழுமத்திற்கு கடன் வழங்குவதில் தனியார் வங்கிகளை விட பொதுத் துறை வங்கி நிறுவனங்களே அதிகம் ஆர்வம் காட்டியிருக்கின்றன. உதாரணமாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, தனது மொத்தக் கடனில் கிட்டத்தட்ட 40% அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், அதானி குழுமத்தின் வியாபார செயற்பாடுகளில் எந்த பாதிப்பு இல்லையென்றும், பங்கு சந்தை மதிப்பு வீழ்ச்சி காரணமாக, எஸ்பிஐ வங்கியின் வரவு-செலவு கணக்குகளில் எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை என்றும் எஸ்பிஐ நிர்வாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: LIC