முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியாவில் கட்டுமானப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்கப்படுவதில்லை - ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவில் கட்டுமானப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்கப்படுவதில்லை - ஆய்வறிக்கையில் தகவல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ப்ராஜக்ட்தேரோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி சத்ய வியாஸ் கூறுகையில், “தொழில்நுட்ப பயன்பாடு பெரிய அளவுக்கு இல்லாத நிலையில், கட்டுமான தொழில் என்பது வெளிப்படைத்தன்மை இன்றி இயக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டின் பெருநகரங்களில் உள்ள பெரும்பாலான கட்டுமானப் பணியாளர்களுக்கு, அரசு வரையறை செய்துள்ளபடி குறைந்தபட்ச கூலி வழங்கப்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளது. நாட்டிலேயே டெல்லியில் தான் மிகக் குறைவான கூலி வழங்கப்படுகிறது. அதே சமயம், ஹைதராபாத் மாநகரில் கட்டுமான ஊழியர்களுக்கு அதிகபட்ச கூலி கிடைக்கிறது. கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் தளமாக செயல்பட்டு வரும் Projectthero வெளியிட்டுள்ள தகவலின்படி, கட்டுமானப் பணியாளர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவான நபர்களுக்குத் தான் ஈபிஎஃப் மற்றும் ஊழியர்களுக்கான அரசு காப்பீடு போன்ற பலன்கள் கிடைக்கின்றன என்று தெரியவந்துள்ளது.

இந்த ஆன்லைன் ஆப்-பில், கட்டுமானப் பணி தொடர்பாக வெளிவருகின்ற காலிப்பணியிடங்கள் மற்றும் விண்ணப்ப படிவ முறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ப்ராஜக்ட்தேரோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி சத்ய வியாஸ் கூறுகையில், “தொழில்நுட்ப பயன்பாடு பெரிய அளவுக்கு இல்லாத நிலையில், கட்டுமான தொழில் என்பது வெளிப்படைத்தன்மை இன்றி இயக்கப்படுகிறது.

 இதன் காரணமாக ஊழியர்களுக்கு மிகக் குறைவான கூலி வழங்கப்படுகின்ற விஷயம் வெளியே தெரிவதில்லை. சட்ட விதிகள் மீறப்படுகின்றன. மோசமான நடத்தைகள் வெளிவருவதில்லை. இன்னமும் 50 மில்லியன் பணியாளர்கள் முறையான தகவலின்றி வேலை தேட வேண்டியிருக்கிறது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்கள் பரிந்துரை அடிப்படையில் பணி செய்கின்றனர். கட்டுமானத் தொழிலில் தொடர்புடைய அனைவரையும் ஒருங்கிணைக்கின்ற ஒற்றை தளம் என்று எதுவும் கிடையாது. இதனால், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வழியில்லை’’ என்று தெரிவித்தார்.

சென்னையிலும் குறைவான கூலி : ஒட்டுமொத்தமாக நாட்டின் பெருநகரங்களை ஒப்பிடுகையில் டெல்லி என்சிஆர், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, புனே போன்ற மாநகரங்களில், அரசு வரையறை செய்தபடி குறைந்தபட்ச கூலி வழங்கப்படுவதில்லை என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.குறிப்பாக, திறன் சாராத பணியாளர்களுக்கான கூலி என்பது இதைவிட மோசமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு கூலி கிடைக்கிறது :  டெல்லியில் உதவியாளர் பணிக்கு செல்லும் பணியாளர்களில் 90.9 சதவீத பணியாளர்களுக்கு ரூ.711க்கு குறைவான அளவில் கூலி வழங்கப்படுகிறது. இதே அளவில் கூலி பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை பெங்களூருவில் 90.4 சதவீதம், புனேவில் 88 சதவீதம், மும்பையில் 87.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் தேர்வு மகாராஷ்டிரா :  கட்டுமானப் பணிகளுக்காக புலம்பெயர்ந்து வேலை செய்யக் கூடிய தொழிலாளர்களின் முதன்மையான தேர்வில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இதற்கு அடுத்ததாக உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணாவில் பணியாற்றுவதை தொழிலாளர்கள் விரும்புகின்றனர். அதே சமயம், கட்டுமானத் துறையில் படிப்படியாக டிஜிட்டல் பேமெண்ட் முறை அறிமுகம் ஆகி வருகிறது என்றும் ப்ராஜக்ட்தேரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: India