கோடைகாலம் வந்து விட்டாலே எலுமிச்சை, தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் போன்றவற்றின் விற்பனை அதிகரிக்க தொடங்கும். குறிப்பாக, எலுமிச்சை பழம் பிழிந்து, அதில் நன்னாரி சேர்த்து வழங்கப்படும் ஜூஸுக்கு, வெயில் நேரத்தில் ஏங்காத நபர்கள் இருக்க முடியாது. ஆக, பொதுவாகவே கோடை காலம் வந்து விட்டால் எலுமிச்சை பழங்களின் விலை சற்று அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால், குஜராத் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு எலுமிச்சை விலை அதிகரித்துள்ளது. அங்கு தற்போது ஒரு கிலோ ரூ.240 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இது ஒரு கிலோ பிராய்லர் கோழி கறியின் விலைக்கு ஈடானது ஆகும். இதுதான் இப்படி என்றால், பச்சை மிளகாயின் விலையோ கண்களில் நீர் கசிய வைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை காட்டிலும் பச்சை மிளகாய் விலை கூடுதலாக இருக்கிறது.
எலுமிச்சை பழம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்று குஜராத்தில் உள்ள வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பொதுவாக குஜராத் மாநிலத்தில் விளையும் எலுமிச்சைகள் மட்டுமின்றி கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகின்றன.
எலுமிச்சை வரத்து குறைவு மற்றும் நெடுந்தொலைவில் இருந்து கொண்டு வருவதற்கான வாகன வாடகை உயர்வு ஆகிய காரணங்களால் எலுமிச்சை விலை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்று வியாபாரிகள் கூறுகின்றனர். நவராத்திரி மற்றும் ரம்ஜான் ஆகிய பண்டிகை காலம் தொடங்கியிருப்பதாலும் எலுமிச்சை விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற மாநிலங்களில் என்ன விலை?
கர்நாடக மாநிலத்தில் எலுமிச்சை பழங்கள் ஒரு கிலோ ரூ.160 என்ற விலையிலும், பச்சை மிளகாய் ரூ.100 என்ற அளவிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அஸ்ஸாம் மாநிலத்தின் காஸி நெமு பகுதியில் பொதுவாக ரூ.4 முதல் ரூ.5 வரையில் விற்பனை செய்யப்படும் ஒரு எலுமிச்சை பழம் தற்போது ரூ.15க்கு விற்பனை ஆகிறது.
Also Read : யானையிடம் இருந்து சிறுவனை காப்பாற்ற போராடிய தந்தை - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஒரு எலுமிச்சை பழம் ரூ.15க்கு விற்பனையாகிறது. அதாவது ஒரு கிலோ ஏறக்குறைய ரூ.180 ஆகும். தேவைக்கு தகுந்தபடி விநியோகம் இல்லை என்பதே விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Also Read : வைரலாகும் எம்பிக்கள் சசி தரூர் - சுப்ரியா சுலே அரட்டை வீடியோ
விலை உயர்ந்துள்ள போதிலும் எலுமிச்சை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு நல்ல லாபம் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏனென்றால் பூ பூக்கும் சமயத்தில் காற்று, மழை போன்ற காரணங்களால் பூக்கள் ஏராளமாக கொட்டி விட்டன. இதனால், பொதுவாக 100 மூட்டை விளைச்சல் கிடைக்க வேண்டிய இடத்தில் தற்போது 30 மூட்டைகள் மட்டுமே விளைச்சல் கிடைக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.