பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல்
காங்கிரஸ் கட்சியில் அக்டோபர் மாத கடைசியில் இணைந்தார். கோவா சட்டப்பேரவை தேர்தலில் அவர் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்று யூகங்கள் பரவத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக நியூஸ் 18 ஊடகத்திற்கு அவர் பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
டென்னிஸ் மைதானத்தில் இருந்து அரசியல் களம் வரை. இதை எப்படி உணர்கிறீர்கள்?
இது நன்றாக இருக்கிறது. நான் பிரச்சாரத்தின் மத்தியில் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். நான் மக்களிடம் செல்கிறே; கோவாவின் பிரச்சனைகளை அவர்களிடம் கேட்டறிகிறேன். நான் 30 ஆண்டுகளாக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கிறேன். நான் இப்போது எனது தளத்தை மாற்றிவிட்டேன், ஆனால் டென்னிஸ் மைதானத்தில் நான் முன்பு இருந்த அதே கடின உழைப்பை மக்கள் களத்திலும் செய்கிறேன். மக்களுக்கு சிறந்த தரமான வாழ்க்கையை வழங்க விரும்புகிறேன், அதற்கு சமூக நல்லிணக்கமும் அமைதியும் அவசியம்.
இங்குள்ள பெண்கள் பகலில் கூட வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். பெரிய குடிப்பழக்கம், சுரங்கப் பிரச்சினை, ஐந்தில் ஒருவருக்கு வேலை இல்லை போன்ற பிரச்சனைகள் நிலவுகின்றன. அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் உண்மையிலேயே காத்திருக்கிறேன். கோவாவில் நல்லாட்சி தேவை, அதை மக்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
அரசியல் என்பது மிகவும் வித்தியாசமான விளையாட்டு. இதில் விளையாட்டு மனப்பான்மைக்கு இடம் இல்லை. உங்களுக்கு பயமாக உள்ளதா?
எல்லோருக்கும் பயம். எங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதில்லை. ஆனால் நாம் வெளியே இருந்தால், விஷயங்கள் எப்படி மாறும்? சிலர் அரசியலுக்கு வந்து, பிரசாரம் செய்து, மூன்று மாதங்கள்அரசியலில் இருந்து , பின் சென்று விடுகின்றனர். நீங்கள் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்பினால், நீங்கள் அமைப்புக்குள் இருந்து கொண்டு அதைச் செய்ய வேண்டும் என்று நான் உணர்கிறேன். அப்படித்தான் வாழ்க்கைத் தரத்தை மாற்ற முடியும்.
இதையும் படிங்க: எரிபொருள் விலையை அமெரிக்கா முடிவு செய்கிறது...எங்களை குறை சொல்வது தவறு: மத்திய அமைச்சர்
ஆம் ஆத்மி கட்சி அல்லது காங்கிரஸ் கட்சியில் சேராமல் திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தது ஏன்?
எனக்கு அனைத்து இடங்களிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே கோவாவை ஜொலிக்க வைக்க முடியும் என்பதால் அந்த கட்சியில் இணைந்தேன். சிங்கப்பூர் போன்ற நல்லாட்சிக்கு கோவாவும் உதாரணமாக கூறப்பட வேண்டும். கோவாவிற்கு நல்ல முறையான நிர்வாகம் தேவை, அதை TMC கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன். ‘Goans for Goa’ என்பது காலத்தின் தேவை. கோவாவுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உண்மையான ஆர்வம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது.
அரசியலில் நீங்கள் எந்த அளவு தீவிரமாக இருக்கிறீர்கள்?
டேவிட் கோப்பையில், விம்பிள்டனில் என நான் 30 ஆண்டுகளாக தேசத்திற்கு சேவை செய்துள்ளேன். நம் நாட்டிற்கான நெருப்பு எனக்குள் இருக்கிறது. டென்னிஸ் மீது எனக்கு இருக்கும் அதே ஆர்வத்துடன் அரசியலில் ஈடுபடுவேன்.
மம்தா பானர்ஜி உங்களுக்கு என்ன ஆலோசனைகள் கொடுத்தார்? 2024ல் மம்தாவுக்கு பெரிய பங்கு இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
2024 வெகு தொலைவில் உள்ளது, அதை நீங்கள் மம்தாவிடம்தான் கேட்க வேண்டும். 2022 பிப்ரவரியில் நடக்கும் கோவா தேர்தல் முக்கியமானது. இந்த தேர்தலில் கோவாவை சேர்ந்தவர்கள் பணியாற்றுவார்கள். கொல்கத்தாவின் தலைவர்கள் அல்ல. கோவாவில் எங்களிடம் ஆற்றல்மிக்க தலைமைக் குழு உள்ளது.
மேலும் படிக்க: 5 கோடி ரூபாய் வாட்ச் அணிபவரா ஹர்திக் பாண்ட்யா? சிக்கிய பின்னரே விலை தெரிந்தது
கோவா கோவா மக்களுக்கே. நமது பாரம்பரியத்தை காப்போம். எனது தலைவரிடமிருந்து எனக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. அவர் எனக்கு இந்த வாய்ப்பையும் ஆதரவையும் கொடுத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர் ஒரு சாம்பியன் மற்றும் சுதந்திரமாக செயல்பட எங்களை அனுமதித்துள்ளார்.
நீங்கள் திரிணாமுல் காங்கிரஸுடன் அரசியல் களத்தில் இறங்க என்ன காரணம்?
கடந்த 20 ஆண்டுகளில் எந்த கட்சியிலும் சேரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் இப்போது, மக்களுக்காக உழைக்க எனக்கு நேரமும் ஆர்வமும் உள்ளது. இங்குள்ள மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் இல்லை என்று பார்த்தேன். கோவாவில் வளங்கள் இருந்தாலும் நல்ல நிர்வாகம் தேவை.
மக்கள் ஏன் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்காமல் திரிணாமுல் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும்?
வேறு எந்த அரசியல் கட்சியையும் பற்றி தவறாக பேச மாட்டேன். அவர்கள் அனைவரும் எனது நண்பர்கள், நாங்கள் அனைவரும் இந்தியாவுக்காக போராடுகிறோம். அரசியலில் பொதுவாக செய்வதை நான் செய்ய மாட்டேன். நான் என்ன செய்வேனோ அதை மட்டுமே சொல்லுவேன்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவீர்களா?
மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அது மிகப்பெரிய கவுரவமாக இருக்கும்.
உங்களுக்கு முதல்வர் பொறுப்பு கொடுத்தால்...
வாய்ப்பு கிடைத்தால் 30 வருடங்களாக நான் உழைத்த அதே உழைப்பை இதிலும் காட்டுவேன். ஒவ்வொரு பிரச்சினையையும் கவனமாக எடுத்துக்கொண்டு, ஒரு குழுவை உருவாக்கி, மூத்தவர்களிடம் ஆலோசனை பெற்று, கடினமாக உழைப்பேன். கோவாவை நான் முறையாக ஆட்சி செய்வேன். நமது வளங்கள் மூலம் கோவாவை வளம் ஆக்கலாம்.
அப்போதும் சாமானியர்களை சந்திப்பீர்களா?
18 கிராண்ட்ஸ்லாம்கள் வென்ற பிறகும் நான் அப்படியே இருந்தேன். நான் மண்ணின் மகன், எப்போதும் அப்படியே இருப்பேன்.
கோவாவில் நடக்கும் குதிரை பேரத்தை நீங்கள் எவ்வாறு சமாளிப்பீர்கள்
நான் கற்றுக்கொள்ளவும் அறிவைப் பெறவும் முயற்சிக்கிறேன். கடந்த தேர்தலில் என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. குதிரை பேரம் போன்ற எதிர்மறை விஷயங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும் எங்களிடம் உள்ளது. அதில்தான் எங்கள் கவனம்.
மேலும் படிக்க: 20 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் உயிருக்கே ஆபத்து- ரிஸ்வானிடம் கூறிய நர்ஸ்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.