ஹோம் /நியூஸ் /இந்தியா /

நீதித்துறை, நீதிபதிகளை விமர்சிப்பது நல்லதல்ல - உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா

நீதித்துறை, நீதிபதிகளை விமர்சிப்பது நல்லதல்ல - உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா

உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா

உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா

நாட்டின் டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்துவது கட்டாயமாகும் என நீதிபதி பர்திவாலா கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீதும் சமூக வலைத்தளங்களில் எல்லை கடந்து விமர்சனம் வைக்கப்படுவது ஆபத்தான போக்கு என உச்ச நீதிமன்ற நீதிபதி ஜேபி பர்திவாலா எச்சரித்துள்ளார்.

பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரின் பேச்சுக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்கு தொடரப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எப்ஐஆர்கள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்ற வேண்டும் என நுபுர் சர்மா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி பர்திவாலா ஆகியோர் அமர்வு நுபர் சர்மாவை கடுமையாக சாடியுள்ளது. நுபர் சர்மாவை கண்டித்த நீதிபதிகள், நாடு முழுவதும் தீ பற்றி எரியும் சூழலை ஒன்றை நபராக நுபுர் சர்மா உருவாக்கியுள்ளார். நாட்டில் நிலவும் தற்போதைய சூழலுக்கு அவரே பொறுப்பு. உதய்பூரில் நடந்த சம்பவத்திற்கு நுபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சே காரணமாக அமைந்துவிட்டது. டிவியில் தோன்றி அவர் ஒட்டு மொத்த நாட்டின் முன் மன்னிப்பு கேட்க வேண்டும் என காட்டமாக விமர்சித்தது.

இந்நிலையில், நுபர் சர்மா மீதான நீதிமன்ற விமர்சனத்திற்கு சமூக வலைத்தளங்களில் பல தரப்பில் இருந்து அதிருப்தியும் விமர்சனங்களும் எழுப்பப்பட்டன. குறிப்பாக, இரு நீதிபதிகளை குறிவைத்து தனிப்பட்ட தாக்குதல் நடத்தும் விதமான பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இது மிகவும் ஆபத்தான போக்கு என இரு நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பர்திவாலா எச்சரித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் நீதிபதி எச்ஆர் கன்னா நினைவு சிம்போசியம் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றிய நீதிபதி பர்திவாலா கூறுகையில், " தீர்ப்பை வைத்து நீதிபதிகள் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்துவது மிகவும் ஆபத்தான போக்கு. இது நீதிபதிகளை சட்டம் என்ன நினைக்கிறது என்பதை யோசிக்க விடாமல், ஊடகங்கள் என்ன நினைக்கிறது என்பதை யோசிக்க வைத்துவிடும்.

இதையும் படிங்க: அழிவின் விளிம்பில் உள்ள அரசியல் கட்சிகளின் தவறில் இருந்து பாடம் கற்க வேண்டும்- பாஜக செயற்குழுவில் மோடி பேச்சு

சட்ட ரீதியான விவகாரங்களை சமூக வலைத்தளங்கள் அரசியல் ஆக்குகின்றன. முழுமையாக முதிர்ச்சியடையாத ஜனநாயகத்தில் சமூக வலைத்தளங்களை அரசியல் கருவியாக பயன்படுத்துவது அதிகம் காணப்படுகிறது. சட்டத்தின் ஆட்சி என்பது தான் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம். பொது கருத்து என்பது சட்டத்திற்கு கீழ் உட்பட்டது தான். எனவே, பொது கருத்துக்களின் தாக்கத்திற்கு ஏற்ப நீதிமன்றம் தனது தீர்ப்புகளை கூற முடியாது. அண்மை காலமாக நீதித்துறையின் மீதான விமர்சனங்கள், தாக்குதல்கள் எல்லை கடந்து செல்கின்றன. நாட்டின் டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்கள் பாதி உண்மையை மட்டுமே கொண்டு, நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கின்றன. எனவே, நாட்டின் டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்துவது கட்டாயமாகும். அதுவே அரசியல் சாசன சட்டத்தை பாதுகாக்க உதவும்." இவ்வாறு அவர் பேசினார்.

First published:

Tags: Supreme court, Supreme court judge