• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இல்லத்தரசிகள் அனைவருக்கும் பென்ஷன்: கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!

இல்லத்தரசிகள் அனைவருக்கும் பென்ஷன்: கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!

சிபிஎம்

சிபிஎம்

கேரளாவில் சிபிஎம் கூட்டணி 2 வது முறையாக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட இந்த தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளை மனதில் வைத்து அவர்களுக்கு பென்ஷன் வழங்கப்படும் என்ற புதிய வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
5 மாநிலங்களுக்காக சட்டமன்ற தேர்தல் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, வேட்பு மனு தாக்கல் முடிந்து மனு பரிசீலனை என்ற கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் வாக்குறுதிகளையும் அறிக்கைகள் மூலமாக கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகவும் தேர்தல் அறிக்கை பார்க்கப்படுகிறது. இதில் தெரிவிக்கப்படும் திட்டங்களின் அடிப்படையிலேயே அடுத்த 5 ஆண்டுகளில் கட்சிகளின் செயல்பாட்டு நகர்வை கணிக்க முடியும்.

அந்த வகையில் கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி (LDF) தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சிபிஎம் மாநில செயலாளர் விஜயராகவன், சிபிஐ மாநில செயலாளர் கண்ணன் ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். 2 வது முறையாக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட இந்த தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளை மனதில் வைத்து அவர்களுக்கு பென்ஷன் வழங்கப்படும் என்ற புதிய வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இல்லத்தரசிகள் அனைவருக்கும் பென்ஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர அதனைப்பற்றிய விரிவான விவரங்கள் இடம்பெறவில்லை.

இடதுசாரி கூட்டணி (LDF) தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள்:

  • 40 லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

  • கடற்கரைகளை மண் அரிப்பில் இருந்து தடுக்கும் வகையில் கடலோர பகுதிகளை மேம்படுத்த ரூ. 5,000 கோடியில் திட்டம்

  • ரப்பருக்கான குறைந்தபட்ச ஆதார விலையை கிலோவுக்கு 250 ரூபாயாக உயர்த்துவது

  • சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் 2,500 ரூபாயாக உயர்த்தப்படும்

  • LIFE Mission திட்டத்தின் கீழ் கூடுதலாக ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவது

  • மலைவாழ் மற்றும் பட்டியலின மக்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டித்தருவது

  • முட்டை, காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை வெளி மாநிலங்களை நம்பாமல் சுயசார்பாக உற்பத்தி செய்வது

  • விவசாயிகள் வருமானத்தை 50% கூடுதலாக்குவது

  • பொதுத்துறை நிறுவனங்களை பலப்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 கோடி ரூபாய் முதலீடு

  • சிறு குறு நிறுவனங்களின் எண்ணிக்கையை 1.4 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்து 3 லட்சமாக உயர்த்துவது

  • அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக 60,000 கோடி ரூபாய்

  • வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் 45 லட்சம் குடும்பங்களுக்கு 1 - 15 லட்ச ரூபாய் கடன் உதவி வழங்குவது

  • முதியோர் பாதுகாப்பு இல்லங்களை எண்ணிக்கை அதிகரித்தல்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: