கேரள மாநிலத்தில் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. கேரள சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியாக பா.ஜ.க உள்ளது. பாஜக தேசிய தலைவர்கள் கேரளத்தில் முகாமிட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரசாரம் செய்த நிலையில் பிரதமர் மோடி இன்று கேரளாவில் பிரசாரம் மேற்கொண்டார். பாலக்காடு தொகுதியில் போட்டியிடும் மெட்ரோ மேன் இ ஸ்ரீதரனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய மோடி, கேரளத்தை ஆண்டுவரும் இரண்டு கட்சிகளிடையே ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது. ஆளும் இடதுசாரி அரசை பற்றிக்கூற வேண்டும் என்றால் வெள்ளிப்பணத்துக்காக ஏசுவை யூதாஸ் காட்டிக்கொடுத்தார். இங்கு ஆட்சியில் இருக்கும் இடதுசாரி அரசு சில தங்கக்கட்டிகளுக்காக, மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது. சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துகிறோம் எனக் கூறி பாரம்பரியத்தை காக்க போராடிய பக்தர்கள் மீது காவல்துறையை கொண்டு தடியடி நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியினருக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியினருக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.நீங்கள் கலாச்சாரத்தை அவமதித்தால், நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம்.” என்றார்.