விசாரணைக்காக அழைக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் மரணமடைந்த விவகாரம்: பட்டப்பகலில் வழக்கறிஞர் தம்பதி கொடூர கொலை - அதிர்ச்சிகர வீடியோ!

விசாரணைக்காக அழைக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் மரணமடைந்த விவகாரம்: பட்டப்பகலில் வழக்கறிஞர் தம்பதி கொடூர கொலை - அதிர்ச்சிகர வீடியோ!

வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் தம்பதி

குண்டா ஸ்ரீனிவாஸ் என்பவர் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்தவர் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த வீடியோ தற்போது சமூக் வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

  • Share this:
தெலங்கானாவில் காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் மரணமடைந்த விவகாரத்தில் பொது நல வழக்கு தொடுத்த வழக்கறிஞர் தம்பதி இன்று மாலை பரபரப்பான சாலையில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் கரீம் நகரைச் சேர்ந்த சீலம் ரங்கையா என்பவர் கடந்த ஆண்டு மே 26ம் தேதியன்று, ராமகுண்டம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மந்தானி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இது தொடர்பாக பொது நல வழக்கு தாக்கல் செய்த நாகமணி என்ற பெண் வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடுமாறு தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து போலீசாரிடமிருந்து மிரட்டல்கள் வருவதாகவும், பொய்யான வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்திருப்பதாகவும் இதனால் தனக்கும் தனது கணவரும் வழக்கறிஞருமான கட்டு வாமன் ராவின் உயிருக்கு இதனால் ஆபத்து ஏற்பட்டுள்ளது என கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட இத்தம்பதியினர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரினர்.

இந்நிலையில் வழக்கறிஞர் தம்பதியர் இன்று மாலை 3 மணியளவில் பெடப்பள்ளி அருகே காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மனைவி நாகமணி காரின் இருக்கையில் அமர்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். கணவர் கட்டு வாமன் ராவ் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார்.

அப்போது யாரோ ஒருவர் இதனை வீடியோவாக எடுத்தார் அப்போது தங்களை குத்தியவர்களை அனுப்பியது குண்டா ஸ்ரீனிவாஸ் என்பவர் தான் என அவர் கூறினார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் அவர் உயிரிழந்தார். வழக்கறிஞர் தம்பதியினர் பட்டப்பகலில் கொல்லப்பட்டது தெலங்கானாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குண்டா ஸ்ரீனிவாஸ் என்பவர் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்தவர் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த வீடியோ தற்போது சமூக் வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

சம்பவத்தின் போது தப்பிய காரின் டிரைவரை காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
Published by:Arun
First published: