முகப்பு /செய்தி /இந்தியா / எஸ்எஸ்எல்வி ராக்கெட் மிஷன் தோல்வி - அதிகாரப்பூர்வமாக அறிவித்த இஸ்ரோ

எஸ்எஸ்எல்வி ராக்கெட் மிஷன் தோல்வி - அதிகாரப்பூர்வமாக அறிவித்த இஸ்ரோ

SSLV ராக்கெட்

SSLV ராக்கெட்

தகவல் துண்டிப்பு என ஏற்கனவே இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், தற்போது செயற்கைகோள்களால் பயன் இல்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India

நாட்டின் முதல் சிறிய ரக ராக்கெட்டான எஸ்எஸ்எல்வி இன்று காலை விண்ணில் பாய்ந்த நிலையில், இறுதி கட்டத்தில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ ஏற்கனவே தெரிவித்திருந்தது. தொலைந்த தொடர்பை மீண்டும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக இஸ்ரோ அமைப்பு ட்விட்டரில் கூறியிருந்த நிலையில், தற்போது ஏவப்பட்ட செயற்கைகோளை இனி பயன்படுத்த முடியாது என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்த சிறிய ரக ராக்கெட் திட்டம் குறித்து நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் விகே சரஸ்வத் கூறும்போது, “இது போன்ற சிறிய ரக ராக்கெட்டுகள் தான் சர்வதேச விண்வெளி திட்டத்தில் சிறந்த எதிர்காலத்தை கொண்டுள்ளன. 2027ஆம் ஆண்டுக்குள் சுமார் 7,000 சிறிய ரக செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டங்களுக்கான செலவு சுமார் 38 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, இந்தியாவின் எஸ்.எஸ்.எல்.வி.(SSLV) ரக முதல் ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை போல் பெரிய ரகமாக இல்லாமல் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த SSLV ரக ராக்கெட்டை ஏவுவதற்கு 6 மணி நேரம் கவுன்ட்டவுன் போதும் என இஸ்ரோ அறிவித்தது.

அதன்படி, இன்று அதிகாலை 3.18 மணிக்கு இதற்கான கவுன்ட்டவுன் தொடங்கி, காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த SSLV ரக ராக்கெட்டில், 145 கிலோ எடை உடைய, பூமியை கண்காணிக்க கூடிய இ.ஓ.எஸ் - 02 செயற்கைக்கோள் மற்றும் எட்டு கிலோ எடையிலான ஆசாதிசாட் செயற்கைக்கோள் ஆகியவை விண்ணிற்கு அனுப்பப்பட்டன.

இந்த ராக்கெட் ஏவுவதற்கு தங்களின் பங்களிப்பை அளித்த கிராமப்புற பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகளை, ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

ஏவப்பட்ட ராக்கெட்டின் தகவல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த செயற்கைகோள்களால் இனி எந்த பயனும் இல்லை என அறிவித்துள்ளது. ராக்கெட் மிஷன் தோல்விக்கு சென்சார் செயலிழப்பே காரணமாக இருக்கலாம் என்றும், மேலும் இதை பற்றி இஸ்ரோ ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

First published:

Tags: ISRO, Satellite launch, Sriharikota