பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவை தொடர்ந்து நாடு முழுவதும் 2 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்தி, தமிழ் உட்பட ஏராளமான மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துள்ள பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். உடல்நல குறைவு காரணமாக கடந்த 28 நாட்களாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உயிர் இன்று பிரிந்தது.
லதா மங்கேஷ்கரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாரத ரத்னா, லதா மங்கேஷ்கரின் சாதனைகள் ஒப்பிட முடியாததாக இருக்கும் என்று புகழாரம் சூட்டியுள்ளார். நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் கலைஞர் லதா மங்கேஷ்கர் என்றும், தெய்வீக குரல் நீண்ட அமைதிக்கு சென்றுவிட்ட போதிலும் அவரது பாடல்கள் அழிவில்லாமல் எப்போது இருக்கும். எங்கும் எதிரொலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “லதா மங்கேஷ்கர் பாடல்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தின. திரைப்படங்களுக்கு அப்பால், அவர் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சியில் ஆர்வமாக இருந்தார். அவர் எப்போதும் வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவைக் காண விரும்பினார்.
அவரிடம் இருந்து அளவற்ற பாசத்தை பெற்றதை எனது கவுரவமாக கருதுகிறேன். அவருடனான எனது உரையாடல் மறக்க முடியாததாக இருக்கும். லதா மங்கேஷ்கரின் மறைவால் எனது சக இந்தியர்களுடன் நான் துக்கப்படுகிறேன். அவரது குடும்பத்தினரிடம் பேசி ஆறுதல் கூறினேன். ஓம் சாந்தி’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்... மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும், இதன் போது இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசு சார்பில் லதா மங்கேஷ்கருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இன்று மாலை 6.30 மணிக்கு சிவாஜி பூங்காவில் அரசு சார்பில் இறுதி சடங்குகள் நடத்தப்படவுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.