லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடம்; தனி விமானத்தில் மருத்துவமனை விரைந்த குடும்பத்தினர்

லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடம்; தனி விமானத்தில் மருத்துவமனை விரைந்த குடும்பத்தினர்

லாலு பிரசாத்

ஆபத்தான நிலையில் இருக்கும் லாலு பிரசாத்தை நேரில் சந்திப்பதற்காக அவரின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் தனி விமானம் மூலம் பாட்னாவில் இருந்து ராஞ்சிக்கு விரைந்தனர்.

  • Share this:
பீகாரின் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் அவரின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் ராஞ்சியில் உள்ள  ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லாலுவை நேரில் சந்திப்பதற்காக தனி விமானம் மூலம் பாட்னாவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு விரைந்தனர்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனரான லாலு பிரசாத் யாதவ் பீகார் முதல்வராக இருந்த போது கால்நடை தீவன ஊழல் செய்த வழக்கில் 14 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். 2017ம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத் யாதவுக்கு பல்வெறு உடல்நலக் குறைகள் இருப்பதன் காரணமாக சிறை நிர்வாகத்தின் அனுமதி பெற்று ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

லாலு பிரசாத் யாதவ்


இந்நிலையில் அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மீண்டும் ரிம்ஸ் மருத்துவமனையில் நேற்று உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். லாலுவின் நுரையீரலில் தொற்று இருப்பதாகவும், அவருக்கு நிமோனியா ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆபத்தான நிலையில் இருக்கும் லாலு பிரசாத்தை நேரில் சந்திப்பதற்காக அவரின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் தனி விமானம் மூலம் பாட்னாவில் இருந்து ராஞ்சிக்கு விரைந்தனர். இதற்கிடையே லாலுவின் மகளான மிசா பாரதி ஏற்கனவே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் தனியே பிரிக்கப்படுவதற்கு முன்னர் ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தின் முதல்வராக லாலு பிரசாத் இருந்த போது கால்நடை தீவனம் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டது. அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அனைத்திலும் அவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் 3 வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ள லாலு பிரசாத் 4வது வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
Published by:Arun
First published: