ஹரித்வாரில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கும்பமேளா: கொரோனா காரணமாக இந்தாண்டு விழா நாட்கள் 30 ஆக குறைப்பு!

ஹரித்வாரில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கும்பமேளா: கொரோனா காரணமாக இந்தாண்டு விழா நாட்கள் 30 ஆக குறைப்பு!

ஹரித்வாரில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கும்பமேளா

பொதுவாக 4 மாதங்கள் வரை நடைபெறும் கும்பமேளா இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 30 நாட்களுக்கு மட்டுமே நடத்தப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.

  • Share this:
உலக பிரசித்தி பெற்ற ஹரித்வார் கும்பமேளா கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.

உலகிலேயே மத நிகழ்வில் அதிகம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்வு என்ற பெருமை கொண்டது கும்பமேளா. இந்தியாவில் பிரயாக்ராஜ் (அலகாபாத்), ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய 4 ஊர்களில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்துக்களின் புனித நிகழ்வான கும்பமேளாவில் சாதுக்கள், பொதுமக்கள் என கோடிக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு ஆறுகளில் புனித நீராடுவர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் இந்த ஆண்டு கும்பமேளா நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பொதுவாக 4 மாதங்கள் வரை நடைபெறும் கும்பமேளா இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 30 நாட்களுக்கு மட்டுமே நடத்தப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.

மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் விழாவுக்கு வரும் போது கொரோனா நெகட்டிவ் சான்றிதழும் அவசியமாக எடுத்துவர வேண்டும். இந்த சான்றிதழ் 72 மணி நேரங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் கும்பமேளா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அதே நேரத்தில் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக கும்பமேளா மாறிவிடக் கூடாது என்பதால் இந்த ஆண்டு 4 மாதங்களுக்கு பதிலாக 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் கும்பமேளாவானது இம்முறை 11 ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்படுகிறது.

கடைசியாக கடந்த 2010 ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை ஹரித்வாரில் கும்பமேளா கொண்டாடப்பட்டது.

கும்பமேளா விழா கொண்டாடப்படும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது. கங்கை நதிக்கரையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக ஆற்றின் மீது புதிய நடைபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பழைய பாலங்களும் வண்ணம் தீட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கும்பமேளாவில் சாதாரண நாட்களில் 10 லட்சம் பேரும், முக்கிய நாட்களில் 50 லட்சம் பேரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்பமேளாவில் கலந்து கொள்பவர்கள் haridwarkumbhmela2021.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் சுயவிவரங்களை குறிப்பிட்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். RT-PCR பரிசோதனை நெகட்டிவ் அறிக்கைகளை சமர்ப்பித்து விழாவில் கலந்துகொள்வதற்கான பாஸ்-களை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம். பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: