பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்தபோது, உத்தரப்பிரதேச எல்லையில் தடுத்துநிறுத்தப்பட்டு தடியடி நடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள், இரவு வரை அங்கேயே காத்திருந்தனர். இதையடுத்து, டெல்லிக்குள் செல்ல நள்ளிரவில் போலீஸார் அனுமதித்தனர்.
கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கு இலவச மின்சாரம், தொழிலாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்தல் உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். பாஜக-வின் விவசாயிகள் பிரிவான பாரதிய விவசாயிகள் சங்கம் சார்பில், உத்தரகாண்டு மாநிலம், ஹரித்வாரில் கடந்த 23-ம் தேதி தொடங்கிய இந்த பாத யாத்திரையில், பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.
பேரணியின் இறுதிகட்டமாக டெல்லியில் காந்தி நினைவிடம் அருகே உள்ள விவசாயிகள் சங்கத் தலைவர் சவுத்ரி சரண் சிங்கின் நினைவிடத்துக்கு நேற்று சென்றடைய விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், மகாத்மா காந்தி பிறந்ததினத்தையொட்டி, டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால், உத்தரப்பிரதேச எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அப்போது, தடைகளை மீறிச் செல்ல விவசாயிகள் முயற்சி மேற்கொண்டனர். விவசாயிகளை கலைக்க தண்ணீரை பீய்ச்சியடித்ததோடு, தடியடியும் நடத்தப்பட்டது. எனினும், எல்லையிலேயே விவசாயிகள் காத்திருந்தனர். தடைகளை உடைத்தெறிந்து செல்வோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நள்ளிரவில் தடைகளை போலீஸார் அகற்றினர். டிராக்டர்கள் மூலம், விவசாயிகள் டெல்லிக்குள் சென்றனர். அங்கு சவுத்ரி சரண் சிங் நினைவிடத்தில் காத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காஸியாபாத் நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
முன்னதாக, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 10 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிடப்படும் என்றும், விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து ஆராய 6 மாநில முதலமைச்சர்களை உள்ளடக்கிய குழுவை அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்க விவசாயிகள் மறுத்துள்ளனர்.
ALSO WATCH...
Published by:Saravana Siddharth
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.