மன் கி பாத் உரையின் போது தன்னைப் பாராட்டியதற்காக பிரதமர் மோடிக்கு சோசியல் மீடியா பிரபலமான தான்சானியாவைச் சேர்ந்த கிலி பால் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றி பிரதமர் மோடி, இந்தி பாடல்களை உதட்டளவில் ஒத்திசைத்து செய்து சமூக ஊடகங்களில் வைரலான தான்சானியா நாட்டின் இரட்டை சகோதிரிகளான கிலி பால் மற்றும் நீமா ஆகியோர் இந்திய இசையில் ஆர்வம் காட்டியதை குறிப்பிட்டார். மேலும் அவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அவர்களைப் போலவே நமது இளைஞர்களும் பிரபலமான இந்திய மொழி பாடல்களை உலகறிய செய்யும் வகையில் வீடியோக்களை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இது அவர்களை பிரபலமாக்குவது மட்டுமின்றி புதிய தலைமுறையினருக்கு நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் என்றும் கூறினார்.
நிகழ்ச்சியில் கிலி பால் பிரதமர் புகழ்ந்து பேசியதாவது: "அவர்களுக்கு இந்திய இசையின் மீது அதிக விருப்பமும், மோகமும் உள்ளது. அவர்களுடைய லிப் சிங்க்கைப் பார்க்கும் போது எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்பது தெரிகிறது. சமீபத்தில், குடியரசு தின விழாவை முன்னிட்டு, நமது தேசிய கீதத்தை கிலி பாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு உருக்கமான பாடல் ஒன்றை அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த இரட்டையர்களின் அற்புதமான திறனை நான் மிகவும் பாராட்டுகிறேன். சில நாட்களுக்கு முன்பு, கிலி பால் தான்சானியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் கௌரவிக்கப்பட்டார்" எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கிலி பால், "எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது, உங்களுக்கு நன்றி ஐயா. இது போன்ற அழகான வாழ்த்துக்களை பெறுவது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்த பாராட்டு கோடிகணக்கான ஊக்குவிப்பை பெறுவதற்கு ஒப்பானது” என பதிவிட்டுள்ளார்.
டிக்-டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாவில் கலக்கி வரும் தான்சானியாவைச் சேர்ந்த இரட்டையர்களான கிலி பால் மற்றும் அவரது சகோதரி நீமாவிற்கு இந்தியாவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இசைக்கு மொழி தேவை இல்லை என்பதை உணர்த்தும் விதமாக இந்தியாவில் ஹிட்டாகும் பல மொழி பாடல்களுக்கும் அண்ணனும், தங்கச்சியும் அச்சு அசலாக உதட்டை அசைத்து அசத்துகிறார்கள். அவர்கள் உடல் மொழியும், வாய் அசைவும் அவர்களே அந்த பாடல்களை பாடுவதை போன்ற உணர்வை கொடுக்கிறது.
Also read... இந்தியாவின் 4 மூலைகளிலும் பிரம்மாண்ட அனுமன் சிலை கட்டும் தொழிலதிபர்... காரணம் என்ன?
தான்சான்யா பகுதியில் வசிக்கும் மக்களின் பாரம்பரிய உடையில்தான் இருவரும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் இந்தி பாடல்களுக்கு ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்த இருவரும், தற்போது தெலுங்கு, தமிழ் என இந்தியாவை கலக்கி வருகின்றனர். சமீபத்தில் புஷ்பா படத்தில் இடம் பெற்ற சாமி பாடலில் அல்லு அர்ஜுன் அசத்தலாக ஒரு ஸ்டெப் போட்டிருப்பார் அதே போல் கிலி பால் நடனமாடிய ரீல்ஸ் வீடியோ 3 மில்லியனைக் கடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வைரலான பீஸ்ட் பாடலுக்கு கிலி பால், நீமா ஆடிய நடனம் இன்ஸ்டாகிராமில் லைக்குகளை குவித்து வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.