• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ரூ.58 லட்சம் கேட்டு சிறுவன் கடத்தல்: கடத்தல்காரர்களை 24 மணி நேரத்திற்குள் சுற்றிவளைத்து அதிரடி காட்டிய காவல்துறையினர்!

ரூ.58 லட்சம் கேட்டு சிறுவன் கடத்தல்: கடத்தல்காரர்களை 24 மணி நேரத்திற்குள் சுற்றிவளைத்து அதிரடி காட்டிய காவல்துறையினர்!

கடத்தல்காரர்கள் 20க்கும் மேற்பட்ட புதிய நம்பர்களில் இருந்து அழைப்பை மேற்கொண்டனர். இதில் 4 எண்கள் சர்வதேச நம்பர்களில் இருந்தும் வந்திருந்தது. மேலும் சில எண்கள் மத்திய பிரதேசம், ஆந்திரா மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட போன் எண்களாக இருந்தது.

  • Share this:
பணத்துக்காக சிறுவனை கடத்திச் சென்ற கடத்தல்காரர்கள் காவல்துறையினரை ஏமாற்ற மேற்கொண்ட யுக்திகளை தவிடுபொடியாக்கிவிட்டு கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை சுற்றி வளைத்து காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் கைமுர் மாவட்டத்தில் உள்ள கம்புரா கிராமத்தைச் சேர்ந்த புரோகிதர் அசோக் குமார் பாண்டே என்பவரின் வீட்டுக்கு கடந்த வியாழன் அன்று மாலை வந்த இருவர் தாங்கள் புதிதாக கட்டியிருக்கும் வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்வதற்காக நல்ல நேரம் குறிக்க வந்திருப்பதாக கூறினர். அப்போது ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு தன்னை வந்து சந்திக்குமாறும் தற்போது நல்ல நேரம் எதுவும் இல்லை என்றும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனவும் புரோகிதர் கூறியிருக்கிறார்.

அதன்படியே ஜன.15ம் தேதிக்கு பிறகு அவரை வந்து சந்திப்பதாக கூறிய அவர்கள் இருவரும் அருகில் உள்ள கடையில் சில சாமான்கள் வாங்க வேண்டும் என்பதால்  தெரிந்தவர்கள் யாரையாவது உடன் அனுப்பி வைக்குமாறு கோரினர். இதனையேற்று அவரின் 15 வயது மகனை அவர்களுடன் அனுப்பி வைத்திருக்கிறார் புரோகிதர்.

அவர்களுடன் சென்ற தனது மகனை வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பாததால் புரோகிதர் மற்றும் அந்த கிராமத்தினர் அனைத்து இடங்களிலும் சிறுவனை தேடியுள்ளனர்.  அந்த சமயத்தில் தங்கள் மகனை கடத்தியிருப்பதாகவும், அவனை உயிருடன் விட வேண்டுமென்றால் 5 லட்ச ரூபாய் தர வேண்டும் எனவும் தொலைபேசியில் மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக புரோகிதரின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

பின்னர் அடுத்த நாள் காலை 10 மணிக்கு மீண்டும் புரோகிதரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுக்கு 58 லட்ச ரூபாய் தர வேண்டும் என்றும் இல்லை என்றால் தங்களின் மகனை கொன்றுவிடுவதாகவும் கூறியுள்ளனர்.

உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினர் கடத்தல்காரர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க தொடங்கினர். கடத்தல்காரர்கள் 20க்கும் மேற்பட்ட புதிய நம்பர்களில் இருந்து அழைப்பை மேற்கொண்டனர். இதில் 4 எண்கள் சர்வதேச நம்பர்களில் இருந்தும் வந்திருந்தது. மேலும் சில எண்கள் மத்திய பிரதேசம், ஆந்திரா மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட போன் எண்களாக இருந்தது.

இதனிடையே அருகாமையில் இருக்கும் உத்தரபிரதேசத்தின் காசிபூர் மாவட்டத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பிர்பூர் எனும் கிராமத்தில் கடத்தல்காரர்கள் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது. உறையவைக்கும் குளிரில், அடர் பனி படர்ந்த சூழலில் இருந்த வீடு ஒன்றில் இருந்து கடத்தப்பட்ட சிறுவனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மேலும் அங்கிருந்த சத்ய நாராயண் திவாரி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது அவரின் மகனும், அவனின் நண்பனுமே இந்த கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

சிறுவன் கடத்தப்பட்ட 24 மணிநேரத்திற்குள் கடத்தல்காரர்களை விரைந்து கைது செய்ய போலீசாருக்கு உயர் காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: