உறை பனியால் போர்த்தப்பட்ட மூணார்... சுற்றுலா பயணிகள் படையெடுப்பு

Munnar

மூணாறில் தாவரங்கள் உறை பனியால் போர்த்தப்பட்டு வெள்ளை நிறமாக காட்யளிப்பதால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

  • Share this:
கேரளாவில் சர்வதேச சுற்றுலாத் தளங்களுள் ஒன்றான மூணாறில் ஆண்டுதோறும் குளிர்காலம் நவம்பரில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும். சுற்றுலாப் பயணிகள் விரும்பும் உறைபனி சீசன் வழக்கமாக டிசம்பர் இறுதியில் இருந்து ஜனவரி மாதம் வரை இருக்கும். இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக அங்கு ஜனவரி 16 வரை மழை நீடித்ததால், தற்போது உறை பனி சீசன் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மூணாறை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குளிர் வாட்டி வருகிறது. வெப்ப நிலையானது ஜீரோ டிகிரிக்கும் கீழ் சென்று மைனஸ் 2 டிகிரி வரைக்கும் சென்றது.

இதனால், பசுமையான தாவரங்கள் அனைத்தும் உறைபனி காரணமாக வெள்ளைபோர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கின்றன. பசும்புல் தரைகளும் வெண்ணிற அடையால் மூடப்பட்டதுபோல் இருப்பதால், அங்குவரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு இயற்கை விருந்தாக அமைந்துள்ளது.  இதேபோல் வட்டவடை, வாழைத் தோட்டம், சிலந்தியாறு, பாம்பாடும் சோலை, கடவரி உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தற்போதுதான் மிகவும் அதிக குளிர் நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து டிவிட்டர் பகத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ள மூணாறு சுற்றுலாத்துறை, அப்பகுதியில் நிலவும் உறைபனி சீசன் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். கேரளா மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இதனை பார்க்க அதிகளவு வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மூணாறுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ராஜமலை, ஆனை முடி, மலைமுடி, ரோஸ் கார்டன், எக்கோ பாயிண்ட், லோக்கார்ட்  கேப் வியூ பாயிண்ட் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களுக்கும் சென்று இயற்கையின் அழகை ரசித்து வருகின்றனர். 

குறிப்பாக, சின்னக்கல் மற்றும் ஆட்டுக்கல் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், அதில் குளித்தும் மகிழ்கின்றனர். 

தமிழக எல்லையையொட்டி கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் மலைப் பிரதேசமான மூணாறு, தென்னகத்து காஷ்மீர், கேரளாவின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமான தேயிலை, காப்பி, ஏலத் தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்குக் கோடைக் காலங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். உறைபனிக்காலம் சுமார் 12 நாட்கள் வரை நீடிக்கும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: