கேரளாவில் குடி போதையில் மலைப்பாம்புடன் சாலையில் வலம் வந்து வழிநெடுவே பாம்பை துன்புறுத்திய இளைஞர் மீது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் வீடியோ காட்சிகளை வைத்து வனத்துறை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முஜுக்குன்னு பகுதியை சேர்ந்த ஜித்து என்ற இளைஞர் இம்மாதம் ஒன்றாம் தேதி அந்த பகுதியில் இருந்து மலைப்பாம்பு ஒன்றை பிடித்துள்ளார். மதுபோதையில் இருந்தவர் அந்த பாம்பை தனது இருசக்கர வாகனத்தில் அடைத்து வைத்து பாம்புடன் வலம் வந்ததோடு இரவு நேரம் அங்காங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு வாகனத்தில் அடைத்து வைத்திருந்த பாம்பை எடுத்து தனது கழுத்தில் போட்டும், இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் சுற்றி வைத்தும் இவர் அந்த பகுதியில் பொதுமக்கள் மத்தியில் காட்சிப்படுத்தி வலம் வந்தார்.
தொடர்ந்து இந்த பாம்பை கொயிலாண்டி காவல் நிலையத்தில் அவர் ஒப்படைத்தார். போலீசார் அந்த பாம்பை பெருவண்ணாமூழி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தற்போது ஜித்து என்ற இளைஞர் பாம்பை காவல்நிலையத்தில் ஒப்படைக்க வந்த போது மது போதையில் அந்த பாம்பை வழி நெடுவே துன்புறுத்தி காட்சிப்படுத்தி வந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ வைரலானதை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் பாம்பை துன்புறுத்திய ஜித்துவை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: சஜயகுமார்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.