முகப்பு /செய்தி /இந்தியா / கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்- தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் அதிகாரிகள்

கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்- தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் அதிகாரிகள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து அண்டை மாநிலமான கர்நாடகாவில் நோய் தடுப்பு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆந்திரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து கேரளாவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  அதிலும் கேரள- தமிழ் நாடு எல்லையான பாறசாலை பகுதியில் 24 வயதான கர்ப்பிணி ஒருவருக்கு முதன்முதலில் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியானது. கேரளாவில் மேலும் 14 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரளாவின் எல்லை பகுதியில் அமைந்துள்ள கர்நாடகாவின் தக்ஷின கன்னடா, உடுப்பி, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆஷா பணியாளர்களை கொண்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தற்போது மழைக்காலம் என்பதால், ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 31 மாவட்டங்களிலும் கண்காணிப்புடன் கூடிய கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த திட்டம் வகுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் கொசு உற்பத்தியை தடுக்க விழிப்புணர்வுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கர்நாடகாவிற்குள் வருபவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகளை பெங்களூரு சோதனை மையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வாராந்திர அறிக்கைகளை சுகாதாரத் துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஜிகா வைரஸ் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜிகா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், வைரஸ் பரவ வாய்ப்புள்ள பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளை மையமாகக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

நான்கு மாதம் வரையுள்ள கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கர்ப்பம் தரித்துள்ளவர்கள் காய்ச்சல் ஏற்பட்டால் உடனே ஜிகா வைரஸ் இருக்கிறதா என பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜிகா வைரஸைக் கண்டறிவதற்கான ஆய்வுக்கூடங்கள் அதிகரிக்கப்படும் என்றும் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியில், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் சக அதிகாரிகளுடன் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். அப்போது, உடனிருந்த மருத்துவ பணியாளர்கள் பொதுமக்களின் உடல்நிலை குறித்த தகவல்களை கேட்டறிந்தனர்.

First published:

Tags: Kerala, Zika Virus