• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • மருத்துவர்கள் பேச இனி கஷ்டம் இல்லை - மைக்குடன் கூடிய மாஸ்க்கை வடிவமைத்து கேரள மாணவர் அசத்தல்!

மருத்துவர்கள் பேச இனி கஷ்டம் இல்லை - மைக்குடன் கூடிய மாஸ்க்கை வடிவமைத்து கேரள மாணவர் அசத்தல்!

கேரள இளைஞர்

கேரள இளைஞர்

நோயாளிகளை கவனிக்கும் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் என இருவருமே மாஸ்க் அணிந்து கொண்டிருப்பது பல நேரங்களில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

 • Share this:
  கோவிட் -19 தொற்றை எதிர்த்து போராட ஃபேஸ் மாஸ்க்குகள் நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. இந்த நேரத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவர் ஒரு புதுமையான கேஜெட் ஒன்றை வடிவமைத்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாம் மாஸ்க் அணிய துவங்கி ஓராண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. மாஸ்க் அணிந்த யாரவது நம்மிடம் பேசினாலோ அல்லது மாஸ்க் அணிந்து கொண்டு நாம் யாரிடமாவது பேசினாலோ அதை புரிந்து கொள்வது பெரும்பாலும் கடினமாகவே உள்ளது.

  இதற்காகவே ஒன்று சத்தம் போட்டு பேச வேண்டியுள்ளது அல்லது அணிந்திருக்கும் மாஸ்க்கை கீழே இறக்கிவிட்டோ அல்லது கழற்றி விட்டோ பேசக்கூடிய நிலையே காணப்படுகிறது. தொற்று மிக தீவிரமாக உள்ள இந்த சூழலில் நோயாளிகளை கவனிக்கும் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் என இருவருமே மாஸ்க் அணிந்து கொண்டிருப்பது பல நேரங்களில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

  குறிப்பாக அடுக்கடுக்கான பாதுகாப்பு கவச ஆடைகளை அணியும் முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பயன்படும் வகையிலும், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையேயான தகவல் தொடர்பை எளிதாக்கும் வகையிலும் கேரள மாணவர் ஒருவர் மைக்குடன் கூடிய மாஸ்க்கை வடிவமைத்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருச்சூர் அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த முதலாம் ஆண்டு பி.டெக் மாணவர் கெவின் ஜேக்கப் என்ற மாணவர் மைக் மற்றும் ஸ்பீக்கர் சப்போர்டுடன் கூடிய ஃபேஸ் மாஸ்க்கை கண்டுபிடித்துள்ளார். மாணவர் கெவின் ஜேக்கப் தனது பெற்றோரிடமிருந்து இந்த சிறந்த யோசனையை செயல்படுத்த உத்வேகம் பெற்றார். ஏனென்றால் மாணவரது பெற்றோர் இருவருமே மருத்துவர்கள்.

  கொரோனா பெருந்தொற்று காரணமாக கெவின் ஜேக்கப்பின் தாய், தந்தை இருவரும் பாதுகாப்பு கவச உடை (PPE kit)அணிந்து கொண்டு இருக்கும் நேரத்தில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்களை கண்டார். தற்போது என்றில்லாமல் கடந்த ஆண்டு முதலே அதாவது தொற்று நோயின் தொடக்கத்திலிருந்தே, நோயாளிகளுடன் தொடர்பு கொள்ளும்போது தனது மருத்துவர் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பார்த்து வந்துள்ளார் கெவின்.

  https://youtu.be/h9Q13aFPvJ8

  இதனை அடுத்தே ஃபேஸ் மாஸ்க்கால் தன் பெற்றோர் போன்ற முன்கள பணியாளர்களின் சிரமத்தை போக்க ஒரு கேஜெட்டை கண்டுபிடிக்க முடிவு செய்தார். காந்தத்தை பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க்குடன் இணைக்கப்பட்ட கேஜெட்டிற்கு சுமார் அரை மணி நேரம் சார்ஜ் போட்டால் போதும். மொத்தம் 6 முதல் 7 மணி நேரம் வரை இயங்கும். தான் கண்டுபிடித்த கேஜெட்டை தனது பெற்றோரிடம் சோதித்த பின், கெவின் அதை ஒரு பெரிய அளவில் உற்பத்தி செய்யத் தொடங்கினார்.

  இந்த குறிப்பிடத்தக்க கேஜெட்டைப் பயன்படுத்தி வரும் பல மருத்துவர்கள், அவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான தொடர்பு இடைவெளியை குறைத்துள்ளதாக கூறி மாணவர் கெவின் ஜேக்கப்பின் கண்டுபிடிப்பை பாராட்டி வாழ்த்தி உள்ளனர். இதன் மூலம் மருத்துவர்கள் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் சீருடைகள் உள்ளிட்ட கனமான அடுக்கு உடைகள் அணிந்திருந்தாலும் கூட நோயாளிகள் அல்லது பிறருடன் பேசும் போது முன்பை போல அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை.

  தனது சாதனத்தை பயன்படுத்தி வரும் அனைத்து யூசர்களும் (50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்) பாசிட்டிவ் கருத்துக்களையே கூறி உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் மாணவர் கெவின். இந்த இளம் கண்டுபிடிப்பாளர் இப்போது தனது கண்டுபிடிப்பின் உற்பத்தியை பெருக்க முக்கியமாக தென்னிந்தியாவில் பெரிய நிறுவனங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: