குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்த மாட்டோம்! மம்தாவைத் தொடர்ந்து பினராயி விஜயனும் காட்டம்

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்த மாட்டோம்! மம்தாவைத் தொடர்ந்து பினராயி விஜயனும் காட்டம்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.
  • Share this:
குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து குடியுரிமைச் சட்டதிருத்தம் அமலுக்கு வந்தாலும் இந்த சட்டத்தை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டதிருத்த மசோதா நிறைவேறியது. நேற்றிரவு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து அது சட்டமாகியுள்ளது.

இந்த சட்டதிருத்தத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து மதரீதியாக துன்புறுத்தலை சந்தித்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். அதிலும் இந்து, சீக்கியர்கள், புத்தம், சமணம், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும். இந்த 3 நாடுகளிலும் இருந்து வந்த இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை தரப்படாது.


இதனிடையே குடியுரிமைச் சட்டதிருத்தத்தை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.இதேப் போன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி “தேசிய குடிமக்கள் பதிவு மற்றும் குடியுரிமைச் சட்ட மசோதா குறித்து யாரும் கவலைப்படவேண்டாம். அந்தச் சட்டங்களை மேற்குவங்கத்தில் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இந்த நாட்டின் ஒரு குடிமகனைக் கூட அவர்களால் அகதிகளாக தூக்கி எறிய முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

மதரீதியாக நாட்டை பிளவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ்-இன் திட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர், சட்டதிருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் குடியுரிமை சட்டதிருத்தை ஆதரித்ததன் மூலம் சிறுபான்மையினருக்கும், ஈழத்தமிழர்களுக்கும் அ.தி.மு.க அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சட்டத்தை கொண்டுவந்த பாஜக அரசைக் கண்டித்தும், ஆதரித்த அதிமுகவைக் கண்டித்தும் வரும் செவ்வாய்கிழமை மாவட்டம்தோறும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
First published: December 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading