• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கேரளாவில் கனமழை குறைந்ததால் இயல்புநிலைக்கு திரும்பும் மக்கள்

கேரளாவில் கனமழை குறைந்ததால் இயல்புநிலைக்கு திரும்பும் மக்கள்

கேரளா வெள்ளம்

கேரளா வெள்ளம்

கேரளாவில் மழைப்பொழிவு குறைந்துள்ளதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

  • Share this:
    அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன. தற்போது மழை பொழிவு குறைந்துள்ளதால் வெள்ள நீர் வடிந்து மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. காட்டாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட சாலைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரியாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உள்ளூர் மீனவர்களின் படகுகள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் மழை பாதிப்பால் தொலைதொடர்பு சேவை முடங்கியதால், ஹாம் ரேடியோ ஆப்ரேட்டர்கள் உதவியுடன் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. .

    மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் உருக்குலைந்துள்ளன. 1,393 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மழை இடர்பாடுகளில் உயிரிழந்த 39 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 6 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மழை பாதிப்பால் 200 கோடி ரூபாய் மதிப்பிலான விளைபயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், உரிய இழப்பீடு தொகை வழங்கும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் வேளாண் துறை அமைச்சர் பிரசாத் தெரிவித்துள்ளார்

    கேரளாவில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. கண்ணூர், காசர்கோடு தவிர பிற 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது. கேரளாவில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 19ம் தேதி வரை வழக்கமாக 192 மில்லி மீட்டர் மழை பெய்யும் நிலையில், தற்போது 453 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: