கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல்களில் 13.82 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை தூதரக தொடர்புள்ள எந்தவொரு கடத்தல் நிகழ்வும் இதற்கு முன் இந்தியாவில் நடைபெற்றதில்லை என்பதால் தங்க கடத்தல் சம்பவம் கேரளாவை மட்டுமல்லாது நாட்டையே புரட்டி போட்டது.
இச்சம்பவத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் மேலும் பரபரப்பை கூட்டியது. இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன், முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள ஆளும் கட்சிக்கு தொடர்புடைய இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமை, சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் விசாரித்து வருகின்றன.
இதனிடையே தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷை மிரட்டி முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக ஆடியோ ஒன்றும் வெளியானது. மேலும் சுவப்னா சுரேஷுடன் பாதுகாப்புக்காக சென்ற இரண்டு பெண் காவலர்களும் அமலாக்கத்துறையினர் மீது புகார் தெரிவித்தனர். இதனையடுத்து முதல்வர் பினராயி விஜயன் மீது கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற முயற்சித்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது இரண்டு எஃப்.ஐ.ஆர்-களை கேரள குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்தனர். இது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான வழக்குப்பதிவை எதிர்த்து அமலாக்கத்துறையின் கொச்சி மண்டல இணை இயக்குனர் பி. ராதாகிருஷ்ணன், கேரள உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். அதில் கேரள காவல்துறையினரின் விசாரணை கேலிக்கூத்தானது. சட்டரீதியான விசாரணையைத் தடம் புரளச் செய்யும் நோக்கத்தில் இந்த எஃப்.ஐ.ஆர்களை கேரள காவல்துறையினர் பதிவு செய்திருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறிய கேரள உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறையினர் மீது கேரள போலீசார் பதிவு செய்த இரண்டு எஃப்.ஐ.ஆர்களையும் ரத்து செய்து தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது முறையிடுவதாக இருந்தால் பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தான் கேரள போலீசார் முறையிட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளதுடன், விசாரணை நிலை அறிக்கையை விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Published by:Arun
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.