சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு சரிதான்; கடகம்பள்ளி சுரேந்திரன் ஏன் மன்னிப்பு கேட்டார் என தெரியவில்லை - சீதாராம் யெச்சூரி

கடகம்பள்ளி சுரேந்திரன் - சீதாராம் யெச்சூரி

சிபிஎம் கட்சி மீண்டும் வெற்றி பெற்றால் பினராயி விஜயன் தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார். எதிர்காலத்தில் பெண்களுக்கும் முதல்வர் வாய்ப்பு கொடுக்கப்படும் என யெச்சூரி கூறினார்.

  • Share this:
சபரிமலை விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசின் நிலைப்பாடு சரிதான், தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஏன் மன்னிப்பு கேட்டார் என தெரியவில்லை என்று சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

அண்டை மாநிலமான கேரளவிலும் சட்டமன்ற தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் சபரிமலை விவகாரம் கேரள அரசியலின் மையப் புள்ளியாக மாறியிருக்கிறது. 2018ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து புகழ்பெற்ற சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதித்த விவகாரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டிற்காக தேவசம் போர்டு அமைச்சராக இருக்கும் கடகம்பள்ளி சுரேந்திரன் சில நாட்களுக்கு முன்னர் மன்னிப்பு கோரியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் கூறுகையில், அது முடிந்து போன ஒன்று. . 2018ல் நடந்தவை எங்களுக்கு வருத்தத்தை தந்தது. இனிமேல் அது போன்ற ஒன்று நடக்கவே கூடாது என கூறினார்.

இந்நிலையில் தனியார் மலையாள செய்தி தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியிடம் சபரிமலை விவகாரம் உள்ளிட்ட கேரள அரசியல் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

சபரிமலை விவகாரம் தொடர்பாக யெச்சூரி பேசுகையில், சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு சரிதான். உச்சநீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அப்படி அமல்படுத்தாமல் போனால் நீதிமன்ற நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும் தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் எதற்காக மன்னிப்பு கேட்டார் என தனக்கு தெரியவில்லை என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

மேலும் சிபிஎம் கட்சி மீண்டும் வெற்றி பெற்றால் பினராயி விஜயன் தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார். எதிர்காலத்தில் பெண்களுக்கும் முதல்வர் வாய்ப்பு கொடுக்கப்படும் என யெச்சூரி கூறினார்.

எதிர்வரும் கேரள சட்டமன்ற தேர்தலில் வலதுசாரி கூட்டணியின் கழக்கூட்டம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கடகம்பள்ளி சுரேந்திரன் சபரிமலை விவகாரத்திற்காக திறந்தமனதுடன் வருத்தம் தெரிவித்தார். முன்னதாக சிபிஎம் கட்சியானது நாடாளுமன்ற தேர்தலின் போது சபரிமலை விவகாரம் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: