Home /News /national /

கேரளாவில் மாணவருக்கு நிபா வைரஸ்: 86 பேர் தீவிர கண்காணிப்பில் அனுமதி!

கேரளாவில் மாணவருக்கு நிபா வைரஸ்: 86 பேர் தீவிர கண்காணிப்பில் அனுமதி!

நிபா வைரஸ்- சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்              (கோப்புப் படம்)

நிபா வைரஸ்- சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் (கோப்புப் படம்)

கேரளாவில் கல்லூரி மாணவர் ஒருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்படுள்ள நிலையில், மேலும் 86 பேர் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

எர்ணாகுளம் மாவட்டம் வடக்கு பரவூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த மாணவர் தலைவலி, வாந்தி போன்றவற்றால் அவதிப்பட்டதால் நிபா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவரது ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மருத்துவப் பரிசோதனையில் அந்த இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது  உறுதி செய்யப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்தார்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மாணவருக்கு சிகிச்சையளித்த 2 செவிலியர்கள் உட்பட 86 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் அமைச்சர், மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் கேட்டுக் கொண்டார்.

நிபா வைரஸ்


மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பீதியடையத் தேவையில்லை. ஒவ்வொருவரும் விழிப்போடு இருக்க வேண்டும். காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கட்டுப்பாட்டு மையத்திற்கு தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே, ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிபா வைரசால் பாதிக்கப்பட்ட மாணவனோடு தொடர்புடைய 311 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 4 பேருக்கு தலைவலி, வாந்தி போன்ற பாதிப்புகள் இருப்பதால் அவர்களின் ரத்த மாதிரியும் பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நிபா வைரஸ்


நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கல்லூரி நண்பர்களுடன் தொழில் முறை பயிற்சிக்காக திருச்சூர் சென்றிருந்தபோது அவரை நிபா வைரஸ் நோய் தாக்கியது தெரியவந்துள்ளது.

நிபா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தலை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். நிபா வைரஸ் பாதிப்பு குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனிடையே,டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்தன், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவை தொடர்பு கொண்டு நிபா வைரஸ் பாதிப்பு குறித்து கேட்டறிந்ததாகவும், நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என உறுதியளித்திருப்பதாகவும் கூறினார். மேலும், 6 பேர் கொண்ட மருத்துவக் குழுவை கேரளாவிற்கு நேற்று அனுப்பி வைத்துள்ளதாகவும் ஹர்ஸவர்தன் கூறினார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Kerala, Nipah Virus, Student, Virus

அடுத்த செய்தி